ஹரியானா மாநிலத்தின் அரசியல், புதிய முதல்வரின் பின்னணி... குறித்த இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி :
தமிழை இரண்டாம் அலுவல் மொழியாகக் கொண்டிருந்த வடமாநிலம்!
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானாவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார் தேவிலால். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். 1966ல் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹரியானா என்கிற மாநிலம் உதயமானது. அதன் முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பகவத் தயாள் சர்மா என்பவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தேவிலாலுக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், 1971ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தன்னை நிரூபித்தார். 1975ல் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, தேவிலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் சிறையில் இருந்தபோது, தேசிய தலைவர்களுடனான நெருக்கம் அதிகரித்திருந்தது, நெருக்கடி நிலையை எதிர்த்த ஹரியானாவின் சிங்கம் என புகழப்பட்டார்.
தேவிலால்
1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் சார்பில் தேவிலால் போட்டியிட்டார். ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. ஹரியானா முதல்வராக முதல் முறையாகப் பதவியேற்றார் தேவிலால். இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார். நெருக்கடி நிலைக்கு எதிராக இருந்த தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர். அப்படி போட்டியிட்ட தேவிலால், தான் வகித்த முதல்வர் பதவியை அதே ஜனதா தளம் கட்சியில் இருந்த பஜன்லால் என்பவரிடம் கைமாற்றிவிட்டார். தேவிலால் மூலம் முதல்வர் பதவிக்கு நெருக்கடி வர, அப்படியே காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார் பஜன்லால். தேவிலால் எம்.பியாகி 1980 முதல் 1982ல் வரை மைய அரசியலில் இருந்தார். 82ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜனதா தளம் – ஜனசங்கம் என்கிற பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் ஜனதாதளம் 31 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக, சுயேட்சையுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயல, அது தோல்வியில் முடிந்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார். ஜனதா கட்சியில் நம்பிக்கை துரோகிகள் உள்ளார்கள் என அதிலிருந்து பிரிந்து 1987ல் லோக்தளம் என்கிற கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 90 இடங்களில் 85 இடங்களில் லோக் தளம் கூட்டணி வெற்றி பெற்று பெரும் சாதனை புரிந்தது, மீதி 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பெரிய வெற்றியோடு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் தேவிலால். 1989ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.பியானவர், தனது முதல்வர் பதவியை தனது மகன் ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் தந்துவிட்டு ஒதுங்கினார். மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான குழப்பத்தில் மாறி மாறி முதல்வராக 4 பேர் அமர கடைசியில் ஆட்சி கலைக்கப்பட்டது.
ஓம்பிரகாஷ் சௌதாலா
1991ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு பஜன்லால் முதல்வராகப் பதவிக்கு வந்தார். அவருக்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூன்று முறை முதல்வராக இருந்த பான்சிலால் தொடங்கிய ஹரியானா விகாஸ் ( விவசாயி ) கட்சி ஆட்சியை பிடித்து பான்சிலால் முதல்வரானார். இருவருமே ஹரியானாவில் ஜாட் சமுதாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள். ஜனதா கட்சியில் முதல்வராக இருந்த பஜன்லால், பின்னர் முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியின் உதவி பெற்று முதல்வரானவர். பிறகு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அதன் பின்னரும் இரண்டு முறை முதல்வராக இருந்தார். 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பான்சிலால் தொடங்கிய ஹரியானா விகாஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆதரவோடு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
அந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் சந்தரமோகன், துணை முதல்வராக இருந்தார். பான்சிலால் தனது மகன் சுரேந்தர் சிங்கை முதல்வராக்க முயன்றார். அப்போது அவர் எம்.பியாக இருந்தார், பின்னர் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். இன்னோரு மகன் ரன்பீர் சிங்கும் பின்பு எம்.எல்.ஏவாக இருந்தார். இவரது மனைவி தொடர்ச்சியாக 1996ல் இருந்து எம்.எல்.ஏ. அதன்பின் அவரது பேத்தி ஸ்ருதியும் 2009ல் எம்பியானார். அதன்பின் பான்சிலாலின் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் 2004ல் இணைந்துவிட்டது. தனது மகனுக்கு முதல்வர் பதவியை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1997ல் ஹரியானா ஜாங்கிட் கட்சி என புதியதாக ஒரு கட்சியை தொடங்கினார் பஜன்லால். இவரின் மற்றொரு மகன் குல்தீப்பும் முன்பு எம்.பியாக இருந்தவர், இப்போது எம்.எல்.ஏவாக உள்ளார். (இவர்களின் கட்சியும் 2016ல் காங்கிரஸோடு இணைந்துவிட்டது) 1998ல் ராஜ்ய சபா எம்.பியாகி வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் துணை பிரதமர் பதவியை அலங்கரித்தார் தேவிலால். அதன்பின் வந்த சந்திரசேகர் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1991 வரை துணை பிரதமராக இருந்தார். அதற்கடுத்த ஆண்டு 1999ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேவிலால் மகன் ஓம்பிரகாஷ் சௌதாலா முதல்வராகி 5 வருடங்களை பூர்த்தி செய்தார்.
சௌதாலா குடும்ப அரசியல்வாதிகள்
ஓம்பிரகாஷ் சௌதாலாவுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் முன்னாள் அமைச்சர் அஜய் சௌதாலா, இரண்டாவது மகன் அபய் சௌதாலா. அஜய் சௌதாலா மைய அரசியலை கவனித்துக்கொள்ள வேண்டும், இளைய மகன் மாநில அரசியலை கவனித்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லி பாகம் பிரித்து கட்சியில் பொறுப்புகளை தந்து வைத்திருந்தார். அஜய் சௌதாலாவின் மகன்தான் 31 வயதான துஷ்யந்த் சௌதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பில் இருந்தனர். ஊழல் புகாரில் 10 ஆண்டுகள் தண்டனை கிடைத்து ஓம் பிரகாஷ் சௌதாலா, மூத்த மகன் முன்னாள் அமைச்சர் அஜய் சௌதாலா இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைவெளியில் கட்சிக்குள் குழப்பம் உருவானது.
தனது அண்ணன் குடும்பத்தையே கட்சியில் இருந்து விரட்டிவிட்டார் அபய். இதில் வெகுண்டெழுந்த அஜய்யின் மகன் துஷ்யந்த், புதியதாக ஜனநாயக லோக்தளம் என்கிற கட்சியை 2018 டிசம்பரில் தொடங்கினார். தனது கட்சிக்கு செருப்பு சின்னத்தை வாங்கினார். இப்படி மாநிலத்தில் தேவிலால் குடும்பம் – காங்கிரஸ் லால் குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர்த்துவிட்டு அரசியல் செய்யவே முடியாது. இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எம்.எல்.ஏ தேர்தலில் 40 சதவித இடங்களிலும், எம்.பி தேர்தலில் 50 சதவித இடங்களில் போட்டியிடுவார்கள். மற்றவைதான் கட்சியில் உள்ள மற்ற பிரமுகர்களுக்கு. முழுக்க முழுக்க சாதி அரசியல் என்பதால் அந்தந்த சாதி மக்கள் இவர்களை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற வைக்கிறார்கள், சில நேரங்களில் வேறு முடிவுகளையும் தருகிறார்கள்.
அந்த முடிவு என்ன? பின்னர் ஆண்டவர்கள் யார்? பாஜகவின் பாதம் ஹரியானாவில் பதிந்தது எப்படி? பாஜக ஆட்சியில் நடந்தவை என்ன?
அடுத்த பகுதி...
எம்.எல்.ஏ ஆன உடனே நேரா முதல்வராகிவிட்டார்!