உலகின் எந்த நாட்டு லேண்டரும் கால்பதித்திடாத நிலவின் தென்பகுதியைக் குறிவைத்து முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள், விக்ரம் லேண்டர், பிரக்யான் ஊர்தி ஆகிய மூன்றையும் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-2. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஸ்ரீ ஹரிகோட்டாவில், 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் நடந்தேறியது. இந்தத் திட்டத்தால் நேரடியாக எந்தப் பலனும் தங்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதை நன்கறிந்த இந்தியாவின் கடைக்கோடி அன்றாடங்காய்ச்சி மனிதர்களில் தொடங்கி இந்தியாவைத் தங்கள் போட்டி நாடாகக் கருதிக்கொள்ளும் வல்லாதிக்க நாடுகள்வரை அனைவரது பார்வைகளும் சந்திராயன்-2 மீதே இருந்தன. சந்திராயன்-2 நிலவின் தென்பகுதியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் எனத் திட்டமிடப்பட்டிருந்த 48 நாட்களும் உச்சபட்ச எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தது இந்திய தீபகற்பம். இத்திட்டம் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாக இருந்தாலும் இதற்கான மூளையாக மற்றும் முன்னத்தி ஏராக இருந்தவர், 'ராக்கெட் மனிதர்' என அழைக்கப்படும் கே.சிவன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை என்ற கிராமத்தில் கைலாச வடிவு மற்றும் செல்லம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சிவன். மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் உள்ள ஏழ்மைக்கும் நடுத்தரத்திற்கும் இடைப்பட்ட நிலையுடைய குடும்பத்தில் பிறந்த சிவன், தன்னுடைய பள்ளிக்கல்வியை ஊரில் இருந்த அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயில்கிறார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பொறியியல் படிக்க வேண்டும் என்பது சிவனின் ஆசை. தன்னுடைய குடும்பச் சூழலைக் காரணங்காட்டி தந்தை கைவிரித்துவிட, பி.எஸ்.சி படிக்கிறார். தன் மகன் ஆசையை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் இருந்த கைலாச வடிவு, சிவனின் அடுத்த கட்டப் படிப்பிற்காகத் தன்னுடைய நிலத்தை விற்று வான்வெளிப் பொறியியல் படிக்க வழிவகை செய்து கொடுக்கிறார். பின், அங்கிருந்து வான்வெளிப் பொறியியலில் மேற்படிப்பு, இஸ்ரோவில் வேலை, பதவி உயர்வு, தலைவர் பொறுப்பு என உயரப் பறந்து சாதித்திருக்கிறார் சிவன்.
"எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். பள்ளி முடிந்ததும் நிலத்திற்குச் சென்று அப்பாவுடன் வேலை செய்வேன். அப்பா மாங்காய் வியாபாரமும் செய்துவந்தார். விடுமுறை என்றால் முழுநேரமும் மாங்காய் தோட்டத்தில்தான் இருப்பேன். அங்கே இருக்கும்போது நானும் ஒரு வேலை ஆள் போலத்தான். ஒரு கல்லூரியில் சேர வேண்டுமென்றால் அந்தக் கல்லூரி எப்படி, அங்கு எப்படி பாடம் கற்றுக்கொடுப்பார்கள் என்றுதான் மற்றவர்கள் பெற்றோர் எதிர்பார்ப்பார்கள். நான் கல்லூரியில் சேரும்போது கல்லூரி வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறதா என்பதைத்தான் என் அப்பா எதிர்பார்த்தார். எங்கள் குடும்பச் சூழலை சமாளிக்க அது தேவையாகவும் இருந்தது. எனக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால், குடும்ப நிலையை எடுத்துக்கூறி அப்பா மறுத்துவிட்டார். அப்பா மனம் மாறுவார் என நினைத்து ஒருவாரம் வரை சாப்பிடாமல் இருந்து பார்த்தேன். கடைசியில் நான்தான் மனம் மாறினேன். கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்தேன். மேற்படிப்பு என்று வரும்போது மனம் மாறிய என் அப்பா, 'ஒருமுறை உன்னைத் தடுத்துவிட்டேன். இப்போது நீ விருப்பப்பட்டதைப் படி... வேண்டுமென்றால் நிலத்தை விற்று உனக்கு உதவுகிறேன்' எனக் கூறினார். அதன்பிறகு எம்.ஐ.டி-யில் சேர்ந்து வான்வெளிப் பொறியியல் பயின்றேன். எம்.ஐ.டி-யில் படிக்கும் போதுதான் முதல்முறையாக என் வாழ்க்கையில் செருப்பு அணிந்தேன். வான்வெளிப் பொறியியலில் இளங்கலை முடித்த பின் வேலை கிடைக்கவில்லை. அதனால் முதுகலை படித்தேன். முதுகலை முடித்ததும் இஸ்ரோவில் வேலை கிடைத்தது".
அதன்பிறகு, தன்னுடைய திறமையை சிவன் படிப்படியாக வளர்த்துக் கொள்ள, இஸ்ரோவில் உயர்ந்த பதவிகள் தேடி வருகின்றன. பொதுவாக வெற்றியாளர்களிடம் உங்களது 'ரோல் மாடல்' யார் எனக் கேட்டால் தங்களுக்கு முன் சாதித்த யாரையாவது குறிப்பிடுவார்கள். மேற்கண்ட பின்புலத்தில் இருந்து வந்து ராக்கெட் மனிதராக சிவன் சாதித்ததே மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கையில், ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு, "நான் பி.எஸ்.சி முடிக்கும் வரை என்னுடைய உலகம் மிகச்சிறியது. பெரிய அளவில் எனக்கு வெளியுலகத் தொடர்பெல்லாம் கிடையாது. அதனால் இவரைப்போல ஆகவேண்டும் என்று நினைத்து அதை நோக்கி உழைக்க எனக்கு வாய்ப்பு அமையவில்லை" எனச் சிவன் அளித்த பதில், அந்த ஆச்சரியத்தை அதிகப்படுத்துகிறது.
நெருக்கடிகள் மிகுந்த அன்றாட வாழ்க்கை ஓட்டக் கரங்களின் பிடியில் இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தப்பி, அந்தச் சந்தர்ப்பங்களை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி, வானுலகை இந்தியாவின் பிரதிநிதியாக இன்று ஆளும் கே.சிவன், 'நினைத்தது கிடைக்காதபோது வருந்தமாட்டேன். கிடைத்ததைச் சிறப்பானதாக மாற்றிக்கொள்வேன். இதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அதற்கான உதாரணங்களையும் அள்ளி அடுக்குகிறார்.
"நான் விரும்பியது என்றும் எனக்குக் கிடைத்ததில்லை. இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்ட போது பி.எஸ்.சி படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு எம்.எஸ்.சி படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பி.டெக் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பி.டெக்கிற்குப் பிறகு வேலையில் சேர வேண்டுமென நினைத்தேன். ஆனால், ஐ.ஐ.எஸ்-இல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பின், சேட்டிலைட் துறையில் சேர வேண்டுமென நினைத்தபோது ஸ்பேஸ் செண்டரில் வேலை கிடைத்தது" எனச் சிரித்தவாறே கூறுகிறார்.
சிறந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பதைவிட கிடைத்த வாய்ப்பை சிறந்ததாக்க முயற்சிப்போம் எனக் கூறும் சிவன் வார்த்தைகளில் தன்னம்பிக்கைத் ததும்புகிறது..
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!
குழந்தைன்னு நினைச்சோம்; 39 வயசு குழந்தைன்னு நினைக்கல! ஒசிட்டா ஐஹீம் | வென்றோர் சொல் #34