"எனக்கு மற்றவர்களை சிரிக்க வைக்க பிடிக்கும். அது மட்டும்தான் பிடிக்கும். எனவே நான் அதை செய்கிறேன்". இவ்வார்த்தைகளை சொன்னவர் ‘மிஸ்டர் பீன்’ என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன். வார்த்தைகள் ஏதும் இன்றி தன்னுடைய முகபாவனை மற்றும் உடல் மொழியினாலும் உலகத்தை சிரிக்க வைத்தவர். சார்லி சாப்ளின் நகைச்சுவையை அந்த காலகட்டத்தில் கண்டு ரசிக்க வாய்க்காதவர்களுக்கு தாமதமாக கிடைத்த வரப்பிரசாதம் ரோவன் அட்கின்சன். ஒரு மனிதனை அழவைப்பது எளிது, ஆனால் சிரிக்க வைப்பதென்பது சவாலானது. அதுவும் வார்த்தைகள் இன்றி சிரிக்க வைப்பதென்பது அதிசவாலானது. வார்த்தைகள் இன்றி சிரிக்க வைக்கும் முறை ரோவன் அட்கின்சன் விரும்பி ஏற்ற முடிவு அல்ல. கையறு நிலையில் அவர் நின்றபோது காலம் கொடுத்த கடைசி அடைக்கலம். "சிறு வயதிலேயே எனக்கு திக்கு வாய். எல்லோரும் பள்ளியில் கிண்டல் செய்தனர். யாரிடமும் சேராமல் நான் விலகியே இருந்தேன். நண்பர்கள் கூட எனக்கு நிறைய கிடையாது", உலகை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்த மிஸ்டர் பீனின் ஆரம்ப கட்ட வாழ்க்கை இது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் துறையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தேர்ந்த கல்வி கற்றவர் அட்கின்சன். நடிக்க வேண்டும், மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும், அதைப்பார்த்து அனைவரும் கைத்தட்ட வேண்டும் என்ற வேட்கையுடன் ஒரு கலைஞன், அவர் வளர, வளர அவருக்குள் நாளும் வளர்ந்து கொண்டே வந்தான். நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்யும் குழுவில் இணைகிறார். திக்கு வாய் குறைபாட்டினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். அவருக்குள் உறங்கிக்கொண்டு இருந்த கலைஞன் சிறிதும் மனம் தளராமல் அவரை தொடர்ந்து உந்தித்தள்ள நம்பிக்கை கொண்டு மீண்டும், மீண்டும் முயற்சிக்கிறார். "திக்குவாய் குறைபாடு மிகவும் இடையூறாக இருந்தது. என்ன செய்தால் நான் சிறந்த நடிகர் ஆக முடியும் என்று யோசித்தேன். திக்குவாய் குறைபாடு உள்ள நடிகனாகவே நடிப்பதுதான் தீர்வு என முடிவெடுத்தேன். அதை எனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டேன்". பின்னாளில் தன்னுடைய நகைச்சுவைகளின்போது பேசும் ஓரிரு வார்த்தைகளையும் திக்கித்திக்கியே பேசினார். அதுவே அட்கின்சனின் அடையாளமானது. தன்னுடைய பலவீனத்தையே பலமாக மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் பக்குவமும் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு வாய்த்திடாது.
"நீங்கள் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அழகான முகமோ, வசீகரமான உடல் அமைப்போ தேவையில்லை. திறமையும், அதை வெளிக்காட்டுவதற்கான ஆற்றலும் இருந்தால் போதுமானது". இந்த வரிகள் ரோவன் அட்கின்சனின் உதடுகள் உச்சரித்து உலக புகழ் பெற்றவை. ஆனால் இந்த உண்மைகள் அறியாத உலகம் அவரையும் பல முறை நிராகரித்தது. எதற்காக உலகம் நிராகரித்ததோ அதையே தன் பலமாக்கிக்கொண்டார். நமக்கும் இது ஒரு பாடம்தானே?....