கேரளா போலீஸ் அதிகாரிகள் குழு ராஜஸ்தானின் மேவாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்தனர். தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மொய்தீன் குட்டியிடம் ஆன்லைன் வழியாக ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்து அதனை ரெக்கார்ட் செய்து ப்ளாக்மெயில் செய்து பணத்தை ஏமாற்றியுள்ளார்கள். அதனை செய்தது பரேஹி கிராமத்தை சேர்ந்த இன்சாம் உல் ஹக் எனச் சொல்லி அது குறித்த ஆதாரங்கள், எப்.ஐ.ஆர், கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணைகளை தந்தனர்.
பரேஹி கிராமத்துக்கு சென்று அவனை பிடித்துத் தரச் சொல்லி போலீஸாருக்கு மேவாட் எஸ்.பி உத்தரவிட்டார். போலிஸ் டீம் அந்த கிராமத்துக்கு சென்றபோது இவர்களை சுற்றி வளைத்து மிரட்டச் செய்தனர் அக்கிராம மக்கள். இதனால் கேரளா போலீஸ் மிரண்டு பின்வாங்கியது. நம்ம கேரளா மாநிலத்தில் இப்படியில்லையே, ஒரு கிராமமே குற்றவாளியை காப்பாற்றுதே என பேசிக்கொண்டனர்.
இந்த மாநிலமே படிப்பறிவு குறைந்த மக்கள் வசிக்கும் மாநிலம். சுதந்திரத்துக்கு முன்புவரை பல ராஜாக்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. சாதி வெறியும், மதவெறியும் நிறைந்த மக்கள் இவர்கள். சாதி பெருமையை காப்பாற்ற தங்கள் வாரிசுகளையே பலி தருவார்கள். சுதந்திரத்துக்கு பின்னர் குட்டி ராஜாக்கள் ஆட்சி முடிந்தபோது இந்த மக்களை அப்படியே அநாதரவாக விட்டுவிட்டார்கள். மன்னராட்சியில் இவர்கள் போர் வீரர்கள், இப்போது இவர்கள் தீண்டத்தகாதவர்கள். தங்கள் வாழ்வுக்காக இவர்கள் இந்தியா முழுக்க பயணமாகி கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லியுள்ளார் ராஜஸ்தான் டி.எஸ்.பி ஒருவர்.
பவாரியா கொள்ளையர்கள் குறித்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. எங்க மாநிலத்திலயும் தீரன் அதிகாரம் அப்படின்னு ஒரு டப்பிங் படத்தையும் பார்த்தோம். அங்கயே எங்காளுங்களப்பத்தி படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என சிரித்துள்ளார் ஒரு ராஜஸ்தான் அதிகாரி.
இவுங்க அவ்வளவு கொள்ளை, கொலையில் ஈடுபட்டிருக்காங்க. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கொள்ளையடிச்சிக்கிட்டு வந்தாங்க, கொலை செய்துட்டு வந்தாங்க, புடிச்சித் தாங்க அப்படின்னு மதராஸி (தென்னிந்திய மாநில காவல்துறை அதிகாரிகள்) போலீஸ் அதிகாரிங்க முன்னாடி அடிக்கடி வருவாங்க. இப்போ வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிட்டான்னு வர்றாங்க. டெல்லி போலீஸ்தான் முதன்முதலா செக்ஸ்டார்ஷனில் சிக்கவைத்து பணத்தை மிரட்டி வாங்கறாங்க அப்படின்னு வந்து சொன்னாங்க. இப்போ எல்லா மாநில போலீஸும் செக்ஸ்டார்ஷன்னு சொல்றாங்க. இதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ராஜஸ்தான் மாநில ஆல்வார் மாவட்ட காவல்துறை அருகில் உள்ள மற்ற மாவட்ட போலீஸாருக்கு அலர்ட் அலர்ட் என ஒயர்லஸ்சில் தகவல் அனுப்பியது.
ராஜஸ்தான் மாநிலம் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று. தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்களோ என அச்சமடைந்து அலர்ட்டானார்கள். அடுத்த சில நிமிடங்களில் கோத்ரிகுரு கிராமத்தில் காவல்துறை – பொதுமக்கள் இடையே மோதல் துப்பாக்கிசூடு என தகவல் வந்ததும் போலீஸார் கொஞ்சம் ரிலாக்ஸாகினர்.
கோத்ரிகுரு?
ஆல்வார் மாவட்டம் பெர்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறிய கிராமம் கோத்ரிகுரு (Gothriguru Village). அந்த ஊரில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 191, மக்கள் தொகை 1377. ராஜஸ்தானி மொழி பேசுகிறார்கள். இந்த கிராமத்தை குறிவைத்துதான் மகாராஷ்டிரா புனோ தத்தவாடா காவல்நிலைய போலீஸ் டீம் வந்திருந்தது. செக்ஸ்டார்ஷனால் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு பெரியவரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் இந்த ஊரில்தான் உள்ளார்கள் என ஆவணங்களைக் காட்டியுள்ளார்கள் ஆல்வார் எஸ்.பியிடம். அந்த கிராமத்துக்கு சென்றால் ஊரில் யாரும் இருக்கமாட்டாங்க. ஊர் எல்லையிலயே புது ஆட்கள் யாராவது ஊருக்கு வருகிறார்களா என கண்காணித்து தகவல் சொல்ல ஆள் வைத்திருக்கிறார்கள். நாம் நுழையும்போதே தகவல் போய்விடும். ஆண்கள் தப்பிப்போய் மறைந்துவிடுவார்கள். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தான் இருப்பார்கள் எனச் சொல்லியுள்ளார்கள். நாம் குறிப்பிட்ட நபரை பிடித்தால் நம்மீது தாக்குதல் நடத்துவார்கள் எனறும் சொல்லியுள்ளார்கள்.
அவர்களை எப்படி பிடிக்கலாம் என ஆலோசனை நடத்தினர். அந்த ஊரில் உள்ள தங்களது இன்பார்மர்களிடம் ஒரு பெயரை சொல்லி அவன் இருக்கிறானா என தகவல் கேட்டனர். இன்பார்மர்கள் இருக்கிறான் எனச் சொன்னதும், அவனை கண்காணிக்கச் சொல்லினர். இன்பார்மர் அவனை கண்காணித்து தகவல்களை அப்டேட் செய்துக்கொண்டே இருந்தான். அந்த கிராமத்துக்குள் நுழைவது எப்படி என போலீஸ் நடத்திய ஆலோசனையில், கோத்ரிகுரு கிராமத்தில் வாரம் ஒருமுறை சந்தை நடக்கும். நிறைய மக்கள் வருவார்கள் சந்தைக்கு போவது போல் கிராமத்துக்குள் 2 பேர், 3 பேராக நுழைவோம். போலீஸ் ஜீப்கள் ஊருக்கு வெளியே இருக்கட்டும். நாம் சிக்னல் தந்ததும் வந்தால் போதும் என முகூர்த்தத்துக்கு நாள் குறித்தனர்.
தாங்கள் தேடிவந்த 32 வயது அன்வர் சுபான்கான் வீட்டிலிருப்பதை இன்பார்மர் மூலமாக உறுதி செய்துக்கொண்டு அவனை நெருங்க போலீஸ் டீம் நெருங்கியதும் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு போலீஸ், போலீஸ் எனக் கத்தத் துவங்கினான். அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார்கள், ஆண்கள் போலீஸை சுற்றிவளைத்து கற்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினர். ஊருக்கு வெளியே காத்திருந்த அதிரடிப்படை போலீஸாருக்கு தகவல் அனுப்பியதும் அவர்கள் கிராமத்துக்குள் வந்து, பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்து வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டனர். அவனை புனே அழைத்து வந்து விசாரிக்கத் தொடங்கியது க்ரைம் போலிஸ் டீம்.
அந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் செக்ஸ்டார்ஷன் தொழிலில் ஈடுப்பட்டிருப்பதை ஆல்வார் மாவட்ட போலிஸ் சொன்னதை நம்பாதவர்கள், குற்றம் சாட்டப்பட்டவனே சொன்னதும் புனே போலீஸ் டீம் அதிர்ச்சியானது. ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் நூற்றுக்கணக்கான சிம் கார்டுகள் இருக்கும். ஒருவரிடம் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே பேசுவோம். அவர்கள் திரும்ப அழைத்தால் எடுக்கமாட்டோம். வேலை முடிந்தாலும், முடியாவிட்டாலும் குறிப்பிட்ட வாரங்களுக்கு பின் அந்த நம்பரை தூக்கிப் போட்டுவிடுவோம்.
வீடியோவில் சிக்க வைப்பது மட்டுமே எங்கள் வேலை. பணம் கேட்டு மிரட்ட வேறு வேறு நபர்கள் வேறு நம்பரை பயன்படுத்துவார்கள். மாட்டிக்கொள்ளக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. மிரட்டலுக்கு பயந்துபோய் பணம் அனுப்பினால் அந்த தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வாங்கமாட்டோம். புரோக்கர்களுக்கு அனுப்பச் சொல்வோம். அவர்களுக்கு அந்தப் பணத்தில் 30 சதவிதம் கமிஷன் தந்துவிடுவோம்.
ஆபசமாக பேசும் பெண்கள் யார்? எங்கள் ஊரில் உள்ள பெண்களுமே அப்படி பேசுவார்கள். லைவ் வீடியோவில் வரும் பெண்கள்? எங்கள் பெண்களே அப்படி செய்வார்கள். லைவில் நடப்பது நாங்கள் ரெக்கார்ட் செய்துகொள்வோம். அந்த ரெக்கார்ட்டை பயன்படுத்தித்தான் அவர்களை மிரட்டுவோம். என்ன படிச்சிருக்க? நான் பத்தாவது ஃபெயில். எப்படி ரெக்கார்ட் செய்கிறீர்கள், டெக்னாலஜியை சர்வசாதாரணமான பயன்படுத்துகிறார்கள்? டட்லஸ் கத்துக்க செக்ஸ்டார்ஷன்னை தான் இப்படி சொல்கிறார்கள். டட்லஸ் கத்துக்க எங்க கிராமத்தில் மட்டும் 3 பயிற்சி மையங்கள் இருக்கு. நானே ஒரு பயிற்சி மையம் வச்சிருக்கேன். மூன்று மாதம் பயிற்சியில் சேர ஒருவருக்கு 40 ஆயிரம் பீஸ். பயிற்சியில் சேருபவர்களுக்கு எப்படி பேசுவது, எதிரில் இருப்பவரை எப்படி ஆடைகளை கழட்ட வைப்பது, அதனை எப்படி ரெக்கார்ட் செய்வது, லைவ் வீடியோக்களை ரெக்கார்ட் செய்வது எப்படி? செல்போன் நம்பரை ஏன் மாற்ற வேண்டும்? சிக்கிக்கொண்டவரை மிரட்டுவது எப்படி? பணம் பேரம் பேசுவது எப்படி போன்றவற்றை கற்றுத் தருவேன் எனச் சொல்லியுள்ளான்.
எப்படி செயல்படுறீங்க? பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் ஓபன் செய்து பாலிவுட் நடிகைங்க படத்தை டிபியா வச்சிக்குவோம். விதவிதமா பாலிவுட் ஹீரோயின்களோட கிளாமர் படத்தை போஸ்ட் செய்துகிட்டே வருவோம். திடீர்னு நிர்வாண நடிகைங்களோட போட்டோக்களில் பேமஸான நடிகைகளோட முகத்தை வெட்டி ஒட்டி தத்ரூபமாக இருக்கற மாதிரி கிராபிக்ஸ் செய்து பதிவிடுவோம். அது வைரலாகும். இதைப் பார்த்து ஜொல்லு விடவே லட்சக்கணக்கானோர் சோசியல் மீடியாவில் இருக்காங்க. அவங்கதான் எங்களோட குறி. அப்படிப்பட்ட போட்டோக்களை தொடர்ச்சியா பார்க்கறதுக்காக முகநூலில் எங்களுக்கு பிரெண்ட் ரெக்வெஸ்ட் தருவாங்க. நாங்க அக்செப்ட் செய்ததும் நாங்க மெசஞ்ஜர்ல சில பல படங்களை அனுப்புவோம். அதில் மயங்குபவர்கள் சாட் செய்வாங்க. சில நாட்களுக்கு பிறகு நெட் கனெக்ஷன் சரியா இல்ல, ஃபோன்ல பேசலாம்னு நம்பர் வாங்குவோம். இல்லன்னா எங்க நம்பர் தருவோம். அவங்க போன் செய்ததும் ஃபோன்ல ஆபாசமா பேசி எதிர்ல இருக்கறவரை பேச வைப்போம். உங்க உடம்ப பார்க்கணும்மான்னு ஆரம்பிப்பாங்க. வாட்ஸ்ஆப் லைவ், பேஸ்புக் லைவ் போன்றவற்றின் மூலமா முதல்ல காட்டுங்கன்னு கேட்டதும் பார்ட், பார்ட்டா காட்டுவோம். உடலைப் பார்த்ததும் இவங்களும் தங்களோட உடம்பை வீடியோவில் காட்டுவாங்க. பிறகு?
தொடரும்..