Skip to main content

லெதர் பால் தந்த பரவசம், பின்னர் கிரிக்கெட் உலகமே இவர் வசம்! தோனி | வென்றோர் சொல் #15

Published on 28/08/2020 | Edited on 26/04/2021

 

Dhoni

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு கேப்டனாக என்னென்ன சாதனைகள் செய்ய முடியும் என்று இணையத்தில் சிரமப்பட்டுத் தேடுகிறீர்கள் என்றால் தோனியின் விக்கிப்பீடியா பக்கத்தினை நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆம்... இரண்டிற்குமான பதில் ஒன்றுதான். ஐ.சி.சி நடத்துகின்ற உலககோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் உலகின் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்திராத சாதனைகள் பலவற்றைச் செய்தவர். பலருக்கு அசாத்தியமானதாகத் தெரிந்த விஷயங்கள் இவருக்கு மட்டும் சாத்தியமானதாகத் தெரிந்ததற்கு பின்பு 'கனவினை நோக்கிய கடின உழைப்பு' என்பதைத் தவிர வேறெந்த ரகசியமும் இருந்துவிட முடியாது. புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ பத்திரிகைகளில் விளையாட்டு செய்திகள் பக்கத்தில் கொட்டெழுத்தில் இவர் பெயர் இருக்கும். 'மகேந்திர சிங் தோனி...' இப்பெயர் இந்திய மக்களுக்கும், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ரத்தத்தோடு கலந்த, சொல்லி விளக்கமுடியாத ஒரு உணர்வு. இவர் ஜார்கண்ட் மாநிலம் இந்தியாவிற்காக தன் கைப்பட எழுதிய வரலாறு.

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி எனும் ஊரில் 'கால் ரூபாய் சம்பளம் என்றாலும் கவர்மெண்ட்டு சம்பளமாக இருக்க வேண்டும்' என்ற மனநிலை கொண்ட சராசரி இந்தியத் தந்தைக்கு மகனாகப் பிறந்த தோனி படித்து முடித்து பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணி செய்ததும், நெடுநாட்களுக்குப் பின் வாழ்வில் அவர் எதிர்பார்த்த ரயில் வர, இனி என்னவானாலும் இதில்தான் பயணப்பட வேண்டும் என்று தனக்குள் சத்தியம் செய்து கொண்டு முழுமூச்சாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியதும், அதன் பின் கிரிக்கெட் வரலாற்றில் அவர் அழித்து எழுதிய அத்தனை பக்கங்களும் உலகம் அறிந்ததே. அந்த வெற்றிப் பயணம் குறித்த அவரது வார்த்தைகள் என்ன? 

 

தன்னுடைய வெற்றி குறித்தும் கடந்து வந்த பாதை குறித்தும் தோனி பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் நம் அனைவரது வாழ்க்கைக்கும் பயன்படும் நம்பிக்கை நாற்றுகள். "வெற்றி என்பது எளிதான விஷயம் தான். நாம் அதைப் பார்க்கும் விதம்தான் சிக்கலாக உள்ளது. என்னுடைய இளமைக் காலங்களில் டென்னிஸ் பந்துகளில் பொழுதுபோக்கிற்காக தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவேன். அங்கு சில நாட்களில் நான் தோற்க நேரிடும். அப்படியென்றால் மறுநாள் வெல்ல வேண்டும் என்பதே அதிகபட்ச ஆசையாக இருக்கும். 14 வயதில்தான் முதல் முறையாக லெதர் பந்துகளில் விளையாடினேன். கையுறை, காலுறை அணிந்து விளையாடும் அனுபவம் எனக்கு உற்சாகத்தையும் பரவசத்தையும் தந்தது. அதன் பின்பு தீவிரமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.

 

அப்போதைய என் கனவு, பள்ளி அணிக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே. ஒரு வருடம் கழித்து பள்ளி அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி அணிக்காக விளையாடும் போது மாவட்ட அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. மாவட்ட அணிக்காக விளையாடிய போது மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் லட்சியம். மாநில அணிக்காக விளையாட ஆரம்பித்த பின்புதான் எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையே வந்தது. இந்த அணுகுமுறைதான் சரியானது என்று நினைக்கிறேன். லட்சியமும், கனவுகளும் குறுகியதாக இருக்கும் போதுதான் அதை அடையக்கூடிய வழியும் எளிதாக இருக்கும்.

 

அந்த வெற்றி தரும் உற்சாகம் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். நீங்கள் ஆசைப்படுகிற விஷயத்தில் நீங்கள் சிறந்தவராக இல்லாமல் இருக்கலாம். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருந்தால் உங்களால் அந்த லட்சியத்தை அடைய முடியும். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் உங்களை மெருகேற்ற வேண்டியுள்ளது என்று அர்த்தம். கிடைக்காத வாய்ப்புகளை நினைத்து வருந்துவது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வதுதான் வெற்றிக்கான முதற்படி. எவ்வளவு வேகமாக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்கிறீர்களோ அவ்வளவு வேகமாக வெற்றியை நெருங்குகிறீர்கள் என்று பொருள்...".

 

http://onelink.to/nknapp

 

தனி நபராக அவரது கனவுகளுக்கு உயிர் கொடுத்ததைப்போல, அணித்தலைவனாக இந்திய அணிக்கு தோனி மறுஉயிர் கொடுத்ததை வரலாறு என்றும் மறுக்காது. பொதுவாக கிராமப்புறங்களில் 'கொடை காணாத தெய்வம்' என கவனிப்பற்றுக் கிடக்கின்ற கோவில் தெய்வங்களைச் சொல்வதுண்டு. தோனி கேப்டன் பதவியை ஏற்கும் வரை இந்த வரிகள் சச்சினுக்கும் பொருந்தும். உலக கிரிக்கெட் ரசிகர்களால் 'கிரிக்கெட்டின் கடவுள்' என அன்போடு அழைக்கப்பட்ட சச்சின் பல சாதனைகள் படைத்திருந்தாலும், உலககோப்பை என்பது அவர் கைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. அதையும் சாத்தியமாக்கி முழு மனநிறைவுடன் சச்சினை வழியனுப்பி வைத்த பெருமையும் தோனிக்கு உண்டு. பொதுவாக இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒரு கத்துக்குட்டி என்பார்கள். ஆனால் தோனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. மின்னலின் வேகத்தை விடக் குறைவான நேரத்தில் பல முறை ஸ்டம்பிங் செய்து இயற்கைக்கே சவால் விட்டவர்.

 

'கடின உழைப்பு', 'அர்ப்பணிப்பு', 'உயிர்ப்புத் தன்மையுள்ள கனவு' இம்மூன்றும் உங்களிடம் இருக்கிறதா???... உலக சாதனையாளர் வரிசையில் உங்களுக்கான இடம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது... தொடர்ந்து ஓடுங்கள்....