முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டு ஊரில் இருக்கும் தனது தங்கச்சியைக் கண்காணிக்கச் சொன்னார். யாருடனாவது உங்கள் தங்கை தொடர்பில் இருக்கிறாரா? என்று கேட்டதற்கு அதெல்லாம் இல்லை வங்கியில் இருந்து சொந்த வீட்டை ஏலத்திற்கு விடப்போவதாக நோட்டீஸ் வந்துள்ளது. தங்கை ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனத் தெரிய வேண்டும் என்று கேட்டார். அதன் பின்பு என்னுடைய குழுவை அனுப்பி அந்த பெண்ணின் தங்கையைக் கண்காணிக்கச் சொன்னேன்.
அந்த பெண்ணின் தங்கை நன்றாக வசதியாக இருந்தார். ஆனால் வேலைக்குப் போகாமல் இருந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்தால் கார் இல்லாமல் பயணிப்பதில்லை. அதற்கேற்ப மேக் அப் போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தொடர்ந்து அந்த பெண்ணைக் கண்காணித்ததில் வேலைக்கே போகாமல் இருக்கின்ற சொத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செலவழிக்கத் தொடங்கினார். பற்றாக்குறைக்கு ரூ.5000 கொடுத்தால் தொகை டபுளாக மாறும் என்று சொல்லி ஏமாற்றும் தொழிலிலும் முதலீடு செய்திருந்தார்.
இதையெல்லாம் ஒரு டாக்குமண்டாக ரெடி செய்து விசாரிக்கச் சொன்ன பெண்ணிடம் கொடுத்தோம். அந்த பெண் தங்கை இப்படி தேவையற்ற செலவுகள் செய்து குடும்ப சொத்தை அழிக்கின்றாள் என்று அதிருப்தியில் புலம்பினார். அதன் பின்பு தங்கையை முறையான கவுன்சிலிங் செல்லச் சொல்லுங்கள் என்றும் இல்லையென்றால் உங்களின் வாழ்கையில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்.
Published on 11/12/2024 | Edited on 11/12/2024