முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், அண்ணனுக்கு பிரச்சனை இருப்பதாகக் கூறி தம்பி கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
இந்த வழக்கு 20 வருடத்திற்கு முன்பாக நடந்தது. தன்னுடைய அண்ணனுக்கு பிரச்சனை இருப்பதாக ஒரு பையன் என்னிடம் வந்து சொன்னார். அக்கெளண்டில் உள்ள அனைத்து பணமும், நகையையும் அண்ணன் எடுத்து யாரிடமோ கொடுத்துள்ளதாக சொன்னார். அதன்படி, அந்த அண்ணனிடம் பேசினோம். கிரிக்கெட் விளையாடும் ஒரு நட்பு வட்டாரம் கிடைக்கிறது. நண்பர்களோடு அவர் அடிக்கடி வெளியே சென்றிருக்கிறார். அப்படி நீயூ யியர் நேரத்தில், ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்கு இந்த பையன் நண்பர்கள் அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு, ஒரு பெண் இருந்திருக்கிறார். இதில் பயந்து போன, அவர் அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து, அந்த பெண் இறந்துவிட்டதாகவும், அந்த பெண் இறந்துபோனதற்கு நீதான் காரணம் அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அந்த நண்பர்கள் மிரட்டியுள்ளனர். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பையன் தன்னுடைய அக்கெளண்டில் உள்ள எல்லா பணம், நகை என அனைத்தையும் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறான். இந்த நேரத்தில் தம்பி கண்டுபிடித்து விஷயத்தைச் சொன்னார்.
இப்போது மீண்டும் 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக சொன்னார். அவர்கள் பேசும்போதெல்லாம் தொடர்ந்து பேசுங்கள் என்று அவருக்கு தொடர்ந்து கைட் பண்ணியிருந்தோம். இப்படியே ஒரு வாரம் செல்கிறது. அதற்குள், நாங்கள் ஸ்டடி பண்ணி ஒரு திட்டத்தை போட்டுவைத்தோம். இந்த பையனிடம் இருந்து எல்லா தகவல்களையும் பெற்று, நண்பர்களை மானிட்டர் செய்கிறோம். இந்த பையனிடம் இருந்து பணத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர்கள் செயல்படுகிறார்கள். நாங்கள் மானிட்டர் செய்ததில், இதில் இல்லாத ஒருவர் அந்த கேங்கில் இருந்தார். அந்த நபர் தான், இதற்கெல்லாம் மூலக்காரணம். அவரையும் ஃபாலோவ் செய்கிறோம்.
குறிப்பிட்ட இடத்தில் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி அவர்களை பிடிக்க போலீஸ் உதவியை நாடுகிறோம். அதன்படி, நாங்கள் ஆறு பேர், போலீஸ் படை என அனைவரும் அந்த இடத்திற்கு செல்கிறோம். எங்களது அறிவுரையின்படி, இந்த பையன் அவர்களிடம் பணத்தை கொடுக்கும் போது அவர்களை சுற்றி வளைத்து பிடித்துவிட்டோம். அதனை தொடர்ந்து, அவர்களை பிடித்து அவர்கள் வந்த மாருதி காரை மப்டியில் வந்த போலீஸ் எடுக்கிறார். நாங்கள் வந்த காரில் நாங்கள் ஏறி, மற்றும் போலீஸ் வண்டி அனைவரும் ஏறிச் செல்கிறோம். செல்லும்போது, அந்த மாருதி காரை இரண்டு பெண்கள் வழிமறித்து எதுவும் சொல்லாமல் தானாக காரில் ஏறி அமர்கிறார்கள். அதே போல், போகும் வழியெல்லாம் ஒன்றோ அல்லது இரண்டு பெண்களோ அந்த வண்டியில் ஏறுகிறார்கள். மொத்தம் 8 பெண்கள் ஏறிவிட்டார்கள். கடைசியில் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று விசாரிக்கையில், ஆந்திராவில் இருந்து 16,17 வயது பெண்களை அழைத்து வந்து விபச்சாரத் தொழில் செய்திருக்கிறார்கள். மானிட்டர் செய்யும் போது மூலக்காரணமாக இருந்த அந்த நபர் தான், இந்த கேங்குக்கு தலைவன். இறந்து போனதாக சொன்ன அந்த பெண்ணும், இந்த கூட்டத்தில் நிற்கிறாள். அந்த வண்டி நின்றால், அந்த பெண்கள் ஆட்டோமேட்டிக்காக ஏறி அமர்வார்களாம். அதன் பிறகு, நாங்கள் அந்த பையனை அழைத்துகொண்டு அங்கிருந்து சென்றோம். எதையோ பிடிக்க போய், ஒரு கும்பலையே பிடித்தோம்.