Skip to main content

டைவர்ஸ் கேட்ட மனைவி; காரணத்தைக் கேட்டு அதிர்ந்த கணவன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 49

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
Detective malathis investigation 49

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு முறையும் பெற்றோர் வீட்டுக்கு சென்ற பின் டைவர்ஸ் கேட்ட பெண்ணின் வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார். 

போஸ்ட் மெரிட்டல் வெரிபிக்கேஷன் இது. ஒரு பையன் தான் என்னிடம் வந்து கேஸ் கொடுத்தார். திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். மனைவி மிகவும் நல்ல குணம் தான். ஆனால், அம்மா வீட்டுக்கு சென்று விட்டு வரும் போது மட்டும் அவளுடைய நடவடிக்கை மாறிவிடுகிறது. நாம் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்? டிவோர்ஸ் வாங்கிக் கொள்ளலாமே என்றெல்லாம் கேட்கிறாள். மத்தபடி எங்கள் இருவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை . இப்படி யோசிக்க என்ன காரணம் என்னவென்று கேட்டாலும் சொல்ல மறுக்கிறாள் என்றார். 

வழக்கை பதிந்து இதில் யாரையும் பின் தொடர்வதற்கு முன்னாடி அந்தப் பெண்ணுடைய குடும்பம், பெற்றோர்கள் என்று ஸ்டடி செய்ய ஆரம்பித்தோம். பார்த்ததில், அந்தப் பெண்ணுடைய அம்மா கணவனைப் பிரிந்து அம்மா வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கா, மற்றும் ஒரு தம்பி என இருக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கும் அந்தத் தம்பிக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தது. அந்தப் பையன் இப்பொழுது தான் ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட 18 வயது வித்தியாசம் இருந்தது. பெண்ணின் அப்பா வேலைக்கு செல்லவில்லை. மிக குறைந்த வருமானதில் குடும்பமே நடந்து வருகிறது என்று புரிந்தது. அந்தப் பெண்ணின் அம்மா, குடும்ப வருமானம் வேறு எங்கியிருந்தும் தனக்கு வராததால் தன் பெண்களின் வருமானத்தை சார்ந்திருக்கிறார். ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் தம்பி பெரியவனாகி வேலைக்குப் போய் அவன் குடும்பத்தை பார்க்கும் வரை இந்தப் பெண்கள் தான் சம்பாதித்து கொடுக்க வேண்டும். சமூகத்திற்காக பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு வருமானம் வேண்டி தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் இப்படி செய்திருக்கிறார் என்று புரிந்தது.

பின்னர், அந்தப் பையனிடம் அழைத்து விஷயத்தை சொன்னோம். அந்த அக்காவிற்கு டிவோர்ஸ் ஆகி அம்மா வீட்டில் இருக்கிறார் என்பது முதலில் இந்தப் பையனுக்கு தெரியவே இல்லை. சொல்லாமல் தான் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். என்ன நடந்திருக்கிறது என்றால் அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் அம்மா வீட்டிற்கு செல்லும்போது அந்தப் பெண்ணிற்கு ஒருவித குற்ற உணர்வை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அடுத்து தம்பியைப் படிக்க வைத்து குடும்பத்தை யார் கரையேற்றுவார்கள். நாம் மட்டும் சந்தோஷமாக சம்பாதித்த காசை செலவு செய்யும் பொழுது, நம் குடும்பம் இப்படி கஷ்டப்படுகிறது என்ற குற்ற உணர்வை அந்தப் பெண்ணிற்கு அம்மா பேசி மனதை இப்படி மாற்றி இருக்கிறார். அதனால் தான் ஒவ்வொரு முறையும் இப்படி மனைவி பிரிந்து விடலாம் என்று தன் கணவனிடம் பேசியிருக்கிறாள். இதை சொன்னதும், இதை என்னிடமே சொல்லி இருந்தால் அவர்களுக்கு நானே பணம் அனுப்பி இருப்பேனே என்று அந்தப் பையன் சொன்னார். 

நாங்கள் இருவரையும் அழைத்து வந்து கவுன்சிலிங்கில் பேசினோம். அந்தப் பெண்ணிடம் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று கேட்டோம். அந்தப் பெண் தயங்கி இதுதான் காரணம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார். கல்யாணமாகி வந்த பின் என் குடும்பம் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறது. எனவே தான் விவாகரத்து வாங்கி அவர்களை பார்த்து கொள்ள அங்கேயே சென்று விடலாம் என்று இருப்பதாக சொன்னார். சரி கணவனிடம் பேசி உன் குடும்பத்திற்கு என்று தொகை ஏற்பாடு செய்யுமாறு நான் பேசுகிறேன் என்று நம்பிக்கை கொடுத்து, அந்தக் கணவனிடம் விஷயத்தை சொன்னேன். 

அவர் முதலில் திருமணமாகிவிட்டால் தன் குடும்பத்தை பார்க்க முடியாது என்ற எண்ணம் முன்பே வந்திருந்தால் என்னைத் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாமே அல்லது இதைக் கல்யாணத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் நான் இதற்கு ஒத்துக்கொண்டிருந்திருப்பேனே என்றார். கடைசியாக மனைவியின் தம்பி வேலைக்கு போகும் வரை பண உதவி செய்வதற்கு அந்தக் கணவர் ஒத்துக்கொண்டார். இன்றைய நாட்களில் கவுன்சிலிங்கில் பேசுவது போல உட்கார்ந்து மனம் விட்டு பேசினாலே நிறைய பிரச்சனைகள் தீர்ந்துவிடும். திருமணம் செய்து கொடுக்க தெரிந்த அம்மாவிற்கு பணத்தேவையும் தனக்கு இருக்கும் என்பதை மாப்பிள்ளை வீட்டிடமும் முன்னாடியே சொல்லி இருக்க வேண்டும்.