தன்னிடம் வந்த விசித்திரமான ஒரு வழக்கு குறித்து நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொள்கிறார்.
திருமணமான ஒரு நடுத்தர வயதுக்காரர் நம்மிடம் வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் தன்னுடைய மனைவி தன்னோடு சந்தோஷமாக இல்லை என்றும், அடிக்கடி தான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் அவர்களை சரியாக கவனிக்க முடியவில்லை என்றும் கூறி என்னுடைய மனைவியிடம் சில வித்தியாசமான நடவடிக்கையை உணர்கிறேன் என்று நம்முடைய உதவியை நாடினார். அவர் ஊருக்குச் சென்ற பிறகு நாங்கள் புலனாய்வைத் தொடங்கினோம். அவருடைய மனைவி இன்னொருவரை தினமும் சந்தித்து வந்தார். அவர் பெற்ற குழந்தையை அந்த நண்பரிடம் கொடுக்க முயன்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து நாங்கள் சேகரித்துக் கொண்டோம்.
ஊரிலிருந்து திரும்பி வந்த கணவர் நம்மிடம் விசாரித்தார். நடந்த விஷயங்களை அவரிடம் கூறினோம். எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினோம். படங்களில் இருந்தது இவருக்கும் நண்பர் தான் என்பது தெரிந்தது. மனைவியிடம் அவரை இதுகுறித்து பேசச் சொன்னோம். தன்னுடைய இரண்டாவது குழந்தை தனக்குப் பிறந்தது அல்ல என்கிற உண்மையை அறிந்துகொண்டதாகக் கூறினார். இவர் அடிக்கடி வெளியூருக்கு செல்பவராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடைய மனைவிக்கும் நண்பருக்கும் உறவு ஏற்பட்டு அதனால் குழந்தை பிறந்துள்ளது.
இவ்வளவு பெரிய விஷயத்தை அவர் நம்மிடம் சாதாரணமாகச் சொன்னார். தன்னுடைய குழந்தையை நண்பரிடம் கொடுக்கப் போவதில்லை என்றும், ஆனால் அந்தக் குழந்தை நண்பருக்குத் தான் பிறந்தது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினார். பரிசோதனைக்குத் தேவையான ஆவணங்களை நண்பரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார். நாங்களும் அதைச் செய்தோம். பரிசோதனையில் அது நண்பருடைய குழந்தை தான் என்று தெரிந்தது.
பின் நாட்களில் சட்டப்பூர்வமாக எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இவை அனைத்தையும் செய்ததாக அவர் கூறினார். மனைவியை விட்டுவிட்டு அடிக்கடி வெளிநாடு செல்வதால் தானும் ஒரு குற்றவாளி தான் என்பதை உணர்ந்ததால் இதைக் கடந்து செல்வதாகக் கூறினார். தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் தான் இனி நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்றும் கூறினார். அவருடைய மனைவியும் புதிய வாழ்க்கைக்குத் தயாரானார்.
வெறுமை உணர்வினால் தான் பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இதற்கு வாய்ப்பில்லை. காலமாற்றத்தில் நன்மையும் பிரச்சனைகளும் சரிசமமாக இருக்கின்றன.