Skip to main content

"தொடர்பு எல்லையைத் தாண்டிப் போன அந்த தொலைபேசிக் குரலை மீண்டும்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #17

Published on 03/01/2020 | Edited on 02/03/2020


இப்படியும் இவர்கள் ஆச்சரியம் மிகுந்த மனிதர்களின் வரிசைப்பட்டியல் விரிவான தேடல்கள் அவர்களின் வடிகால்களாய் கேள்விகள் சுமந்த பதில் சுவர்கள் தங்களின் மேல் தீற்றிக் கொண்ட வரி வடிவங்களாய் சில மாந்தர்கள். ஒரு சோம்பலான ஞாயிறு அன்று அந்த தொலைபேசிக் குரல் என்னை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. உங்களுடைய இப்படியும் இவர்கள் படிக்கிறேன் என்னைப் பற்றி கட்டாயம் பகிருங்கள் என்ற வேண்டுகோளோடு!

நீங்க ...

பெயர் தேவையில்லை, ஆனால் நான் ஒரு பெண் அதை உணரும் பொருட்டோ அல்லது அவனுக்கு உணர்த்தும் பொருட்டோ நித்தம் பிறக்கும் பிள்ளையாகிறேன். அது காதலிலா காமத்திலா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை, ஆறுவருடப் பழக்கத்தில் அரையிருட்டில் எத்தனையோ முறை காதலென்னும் போர்வையில் என் அங்கங்களோடு அவன் விளையாடி இருக்கிறான் அப்போதெல்லாம் இல்லாத மூர்க்கம் கணவனென்று ஆனதும் தோன்றக் காரணம் என்ன என்பதுதான் என் அறியா நிலை. அவளின் விழிகள் மெல்ல மெல்ல கரைந்திட்ட மை எழுதிய கதைகள் வழியே நானும் அவளும் தகிப்புகள் வார்த்தைகளாய் இந்த பக்கங்களில் கோப்பைக்குள் உள்ளிருக்கும் சூட்டை உணராத வெளிப்பக்கத்தைப் போல அவனின் உட்சுவரின் அழுக்கை நான் அன்று அறிந்திருக்கவில்லை.
 

k



என் அறியாப் பருவத்தில் தட்டச்சு இயந்திரப் பள்ளியில் ஆரம்பித்த எங்கள் காதல் கல்லூரி அலுவலகம் என சேர்ந்தே வளர்ந்தது இருவரும் ஒரே காலனியில் வசிப்பதால் எங்களின் நெருக்கம் பிறருக்கு தவறாய் தெரியவில்லை, ஒரு வட்டத்தைப் போட்டு அதற்குள்ளேயே நின்று கொண்டு இருந்தால் காதல் எப்படி வளரும். அதனால் காதலை வளர்க்க இடம் தேடினோம். தியேட்டரின் கதவோர அரை மூலை இருக்கைகள், கடற்கரையின் படகு மறைவுகள், இருட்டு சந்தில் எச்சில் முத்தங்கள் என்று! ஒரு தொடர்கதையின் முடிவைப் போல சில பல போராட்டங்களுக்குப் பிறகு எங்கள் காதல் கைதையிலும் ஒரு சுபம் விழுந்தது. ஆனால் என் வரையில் நெருஞ்சிகள் விரித்த பாதை முட்களாய். என்னதான் எச்சில் இருட்டு முத்தங்கள் இனித்தாலும், கணவன் மனைவி என்ற அன்பு திளைக்கும் அந்த முதல் நாளின் கொடூரம் இன்றும் என் கண்களில்! இரை தேடும் பறவையைப் பிடிக்க வேடனின் விரல்களில் முளைத்திருக்கும் அம்பின் கொடூரம் அந்த இரவுகள்.

மிதமிஞ்சிய அந்த காதலோ காமமோ அதன் வலியை தினம் தினம் அனுபவிக்கிறேன் என்ன செய்ய? யாரிடமும் சொல்ல முடியாதே, இவன்தான் என் இணை என்று நான் பார்த்து ஏற்றுக்கொண்ட வாழ்வு, மேடையேறி பெண்ணியம் பேச துணிந்த நாவிற்கு நான்கு சுவர்களுக்குள் அவனின் கண்ணியம் கட்டுமீறிப் போவதை சொல்ல மனவரவில்லை. சிறைக்குள் அகப்பட்ட பரிசோதனை கூட எலியின் நிலை, அது அம்மனமான எலியின் நிலை. புரியவில்லையா சகோதரி உனக்கு சொல்கிறேன். அன்றாடம் விரியும் அழகான காலைக்குள் என் ரணங்களை மறைத்து உடல் குளித்து உளம் தெளிந்து நேர்த்தியான நாடக தம்பதிகளாய் நாங்களிருவரும் எங்கள் அலுவல்களை நோக்கி இருள் மெல்ல கவியத் தொடங்க தொடங்க என் இதயம் தடதடக்கும் ரயிலின் ஓசையை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்.

ஆம்...இரத்த வெறி கொண்ட ஓநாயின் முன் அதன் கோர பற்களில் அறைபடுவதற்காக என் தேகத்தின் தசைகள் என்று நினையும் போது. அலுவலகத்தின் வாயிலில் தன் வாகனத்தின் மேல் அரக்கனைப் போல தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவன் இதழ்களின் ஓரத்தில் ரத்தம் தெரித்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டே நான் அமருகிறேன். எதிர்ப்பட்ட எல்லாரிடத்தில் பச்சையான சிரிப்பு ஏதேதோ எக்கலிப்பு வார்த்தைகள் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஜாகை, உட்புகும் நேரம் இரைதேடிச் சென்ற பறவைகள், தன் கூட்டிற்குள் நுழையும் போது ஆசுவாசமாய் ஒரு மூச்சிழுக்கும். அறைக்கதவை சாத்தியதும் அவனின் விரல்கள் என் உடைகளை அகற்றி துச்சாதனம் செய்யும். மறுநாள் காலை வரையில் அந்த உடையில்லா நிலைதான்!
 

 

jhk



என்னுடலின் ஒவ்வொரு உறுப்புகளும் அவனின் வக்கிரத்திற்கு தினம் தினம் ஆளாகிறது. கையறு நிலையில் இருக்கிறேன், தொலைபேசியின் இணைப்பில் நான் மீண்டும் கதைத்தேன் சகோதரி நீங்கள் உடனே உங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு யாரிடமாவது இந்த அநீதியைச் சொல்லுங்கள் அல்லது உங்கள் முகவரிதாருங்கள் நானாவது.....

இல்லை இன்னும் வெளிப்படுத்திட முடியாத ரணங்கள் உண்டு. இது என்னோடே புதைந்து போகட்டும், அவனின் உணர்வுகளுக்கு வடிகால், காதல் என்ற வார்த்தையின் சாட்டையில் மயங்கிய விட்டில் பூச்சிகளைப் போலதான் நானும் என் விதி இதுதான். மாற்ற இயலாது பொறுத்துக் கொள்ளப் பழகிவிட்டேன். உண்மையில் எனக்கே இந்த வக்கிரங்கள் இப்போது பழகிப்போய்விட்டது. இப்போது புதிதாய் என்னை சுவைக்கும் போது மற்ற ஆண்களுடன் இணைத்துப் பேசுகிறான், முகம் அறியாத சகோதரியே உன் விரல்கள் என் வருத்ததை எழுதட்டும் என்றுதான் அழைத்தேன் என்று அத்தோடு அந்த இணைப்பு நின்றுப் போனது. எத்தனை முறை தொடர்பு கொண்டும் தொடர்பு எல்லையைத் தாண்டிப் போன அந்த தொலைபேசிக் குரலை மீண்டும் மீண்டும் கடலில் விழுந்த பனித்துளியைப் போலத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.


அடுத்த பகுதி - "தசையினை ரசித்த கண்கள் இன்று அதற்கு அடியில் இருக்கும் ரத்தத்தையும், சீழையும் ரசிக்குமா.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #19

 

சார்ந்த செய்திகள்