பெற்றோர் கொடுத்த பிரஷரினால் படிப்பு மேல் ஆர்வமில்லாமல் கையை அறுத்துக்கொண்ட சிறுமியிடம் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஐ.ஐ.டி தேர்வு தயாராகிக் கொண்டு நன்றாக படித்த மகள், சமீப காலமாக கான்செட்ரேட் இல்லாமல் இருக்கிறார். எதை சொன்னாலும் கோபம் வருகிறது. என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டிக்கிறாள். இரண்டு வாரத்திற்கு முன்னாள், ராத்திரி 1 மணிக்கு சத்தம் கேட்டுப் பார்த்ததில் மகள் கையை அறுத்துக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் மகளுக்கு கொடுக்கிறோம் அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என தெரியவில்லை என்று பெற்றோர் கவுன்சிலிங்கிற்காக வந்தனர்.
அந்த பெண்ணிடம் கேட்டபோது, எனக்கு படிப்பு மேல் ஆர்வமே வர மாட்டிக்கிறது. ஐ.ஐ.டியில் என்னால் தேர்வு ஆக முடியுமா என எனக்குத் தெரியவில்லை. எனக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை, பிளாங்காக இருக்கிறது என்றாள். எது உன்னுடைய கையை அறுக்கு தூண்டியது என அவளிடம் கேட்டேன். அப்பா அம்மா கொடுக்கும் பிரஷரைவிட இந்த வலி பெரிதாகத் தெரியவில்லை. என்ன செய்வதன்று தெரியாமல் தான் கையை அறுத்துக்கொண்டேன் என்றாள். உண்மையிலேயே, அந்த பொண்ணுக்குப் படிப்பதற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், அதை மீறி மோட்டிவேட் செய்கிறோம் என்ற பேரில், உன்னை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம். நல்லா படித்துவிட்டு 1 மார்க் கம்மியாக இருந்தால் கூட மற்றவர்கள் உன்னை தவறாக நினைத்துவிடுவார்கள், எப்படியாவது ஐ.ஐ.டியில் சேர வேண்டும் என்பது மாதிரியான சொற்கள் அதிகளவில் அவளிடம் சொல்லிவிட்டனர்.
குழந்தை ஓய்வு எடுக்கும் நேரத்திலும் அவர்கள் படி படி என்ற பிரஷர் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தான் அவள் இந்த படிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஸ்கூலில் டாப் 3இல் வரமுடியும், ஆனால், இப்போது ஜஸ்ட் பாஸ் ஆனால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் தான் வருகிறது. இதை பற்றி பெற்றோரிடம் சொன்னாலும் அதை அவர்கள் கவனிக்காமல் படிக்க பிரஷர் கொடுத்திருக்கிறார்கள். ஐ.ஐ.டியெல்லாம் வாய்ப்பே இல்லை, எப்படியாவது ஸ்கூலில் பாஸ் செய்தாலே போதும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார். இதையெல்லாம் நான் அவளது பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் இதை ஏற்கவே இல்லை.
படிக்கிற பசங்க கண்டிப்பாக படிப்பார்கள். மற்ற நாட்களில் இல்லாமல் கடைசி எக்ஸாம் நேரத்தில் பிரஷர் செய்வது அவர்களுக்கு ஒரு பதற்றத்தை உண்டாக்குகிறது. கான்செட்ரேட் கம்மியாகிறது என்றால், என்ன தேவை, அமைதிக்கு என்ன தேவை, குழந்தைகளின் ஹெல்த்தை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பேரன்ட்ஸ் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும். பேரன்ட்ஸ் எமோஷனலாக பிளாக்மெயில் செய்ததால், அந்த பொண்ணு நிறையவே பயப்படுகிறாள். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் விட்டுவிடு, உன்னால் இப்பொழுது என்ன படிக்க முடியுமோ அதற்கு டைம் டேபிள் போட்டு ஹெல்த்தையும் பார்த்துகொண்டு படி என கவுன்சிலிங் கொடுத்தேன். எப்படி, பிரேக் எடுக்க வேண்டும், உன்னுடைய மெண்டல் ஹெல்த்தை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொன்னேன். எக்ஸாம் எழுதும் குழந்தைகளோடு பேரன்ட்ஸ் பேச வேண்டும். அவளிடம் படி படி என்ற பிரஷர் கொடுக்காமல், கடந்ததையும் பற்றி பேசாமல், அவளை நிம்மதியாக படிக்க வைத்து எக்ஸாமை எழுத வையுங்கள் என்று பெற்றோரிடம் எடுத்துச் சொன்னேன். அந்த பொண்ணுக்கு இன்னமும் கவுன்சிலிங் கொடுத்து தான் வருகிறேன்.