குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
சாய் பிரியா என்ற பெண்ணுடைய வழக்கு இது. சாய் பிரியாவுக்கு திருமண வரன் தேடிய அவளது பெற்றோர். பி.ஹெச்.டி வரை படித்துள்ள மாதம் ரூ.35000 சம்பாதிக்கும் ஒரு பையனைப் பார்த்துள்ளனர். அந்த பையனுக்கு தலையில் முடியில்லாமல் இருந்துள்ளது. முடி இல்லாவிடினும் தன் பையன் திறமைசாலி என்று அந்த பையனின் பெற்றோர் சாய் பிரியாவுக்கு ஆறுதலான வார்த்தையைக் கூறி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்க வைக்கின்றனர். இதற்கிடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. பின்பு சாய் பிரியா, திருமணம் நடக்கவிருப்பதால் அந்த பையனிடம் பேசுவதற்காக அவனின் நம்பர் வாங்கியிருக்கிறார். அதன் பிறகு ஒரு நாள் சாய் பிரியா, அந்த பையனுக்கு கால் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது அந்த பையன் வித்தியாசமாக சத்தம் போட்டிருக்கிறான். அதற்கு சாய் பிரியா பயந்து தன் பெற்றோரிடம் இதை தெரிவித்திருக்கிறாள். இந்த விஷயத்தைப் பையனின் பெற்றோரிடம் சாய் பிரியா பெற்றோர் கேட்டு விசாரிக்க, இது போல நெருக்கமானவர்களை சில நேரங்களில் விளையாட்டுக்காக இதுபோல கேலி செய்வான் மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறியிருக்கின்றனர்.
மற்றொரு நாள் அந்த பையனுக்கு சாய் பிரியா கால் செய்த போது லேடிஸ் குரலில் பேசி கிண்டலடித்து பன்றி என்று கேலியாகப் பேசியிருக்கிறான். இது சாய் பிரியாவுக்கு பிடிக்காததால் திருமணம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள். ஆனாலும் பையன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வான் போகப் போகப் சரியாகிவிடும் என்று கூறி ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். பையன் வீட்டுத் திருமண பத்திரிக்கையில் பி.ஹெச்.டி பட்டத்தைப் போடாமல் இருந்தது சாய் பிரியா வீட்டார்க்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. அதற்கு அந்த பையனின் வீட்டார் பையன் பி.ஹெச்.டி படித்து வருகிறான் கண்டிப்பாக பட்டம் வாங்கிவிடுவான். அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறியிருக்கின்றனர். ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்தின் போது சாய் பிரியாவின் கணவர் ஜெண்டிலாக நடந்திருக்கிறார். ஆனால் சாய் பிரியா இறுகிய முகத் தோற்றத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து மனக் கசப்பில் திருமணத்தில் பங்கேற்றிருக்கிறாள்.
அதன் பிறகு முதலிரவில் பயங்கரமாக சாய் பிரியாவின் கணவர் குறட்டை விட்டுள்ளார். அந்த சத்தத்தால் தூக்கத்தை இழந்த சாய் பிரியாவுக்கு இதே போல் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்திருக்கிறது. பின்பு சில நாட்கள் கழித்து பெங்களூரில் ஒரு திருமணத்திற்கு தன் கணவருடன் சாய் பிரியா சென்றிருக்கிறாள். செல்லும் வழியில் அவளின் கணவர் தேவையில்லாமல் வித்தியாசமான சத்தங்கள் போட்டுள்ளார். ஏன் இதுபோல சத்தம் போடுகிறீர்கள்? என்று சாய் பிரியா தன் கணவரிடம் கேட்க, அதற்கு அவர் சின்ன வயதிலிருந்து இப்படித்தான் தமாஸூக்கு ஏதாவது சத்தம் போடுவேன் என்று கூறி மழுப்பியிருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து தன் கணவர் வீட்டிற்கு சாய் பிரியா சென்றிருக்கிறாள். அந்த வீடு ஒரு வாரத்திற்கு மேல் சுத்தம் செய்யாமல் இருந்திருக்கிறது. ஏன் இப்படி வீடு சுத்தமில்லாமல் இருக்கிறது என்று சாய் பிரியா கேட்க, அதற்கு அவர் கல்யாண வேலைகள் உங்கள் வீட்டில் நடந்தது. இங்கு யாரும் இல்லை அதனால்தான் வீடு அலங்கோலமாக இருக்கிறது என்று சாமாதானப்படுத்தி அன்றிரவு இருவரும் அங்கேயே தங்கி தூங்கியிருக்கின்றனர். நடுராத்திரியில் தன் கணவர் பாத் ரூம் உபயோகிக்கும்போது அங்குள்ள மாத்திரைகளைப் பார்த்து கணவரிடம், என்னங்க எதாவது உடல்நிலை சரியில்லையா? என்று சாய் பிரியா கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், முடி வளர விட்டமின் மாத்திரைகள் தான் அது ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார். பின்பு இருவரும் தூங்க ஆரம்பித்தனர்.
சில நேரம் கழித்து எழுந்த சாய் பிரியா தூங்கிக் கொண்டிருந்த அறையில் ஒரு உருவம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். அருகில் சென்ற பார்ததபோது அந்த உருவம் தன் கணவர் என்பதை அறிந்து அவரை சாய் பிரியா அழைத்திருக்கிறாள். உடனே அவளது கணவர் மீண்டும் வித்தியாசமான குரலில் கத்தியிருக்கிறார். இதைப் பார்த்த சாய் பிரியா, பயத்தால் உறைந்து நடுங்கியபடி தன் அம்மாவிற்குக் கால் செய்து நடந்ததைச் சொல்லியிருக்கிறாள். அதற்கு சாய் பிரியா அம்மா, அதெல்லாம் ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம் என்று கூறி ஆறுதல் சொல்லியிருக்கிறார். நடந்த சம்பவத்திற்கு சாய் பிரியாவின் கணவர் இரவில் தியானம் செய்ததாகக் கூறி சாய் பிரியாவை சமாதானப்படுத்தி இருக்கின்றார். நடப்பதையெல்லாம் பார்த்த சாய் பிரியா எதோ தவறாக நடக்கிறது என்று உணர்ந்து. அடுத்த நாள் காலையில் தன் கணவரிடம் இரவில் நடந்ததைப் பற்றி விவாதிக்க தொடங்கினாள். அதனால் அவளின் கணவர் மிகவும் கோபத்துடன் இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் அம்மா வீட்டிற்கு போ என்று மிரட்டியிருக்கின்றார். இதனால் மிகவும் வேதவைப்பட்டு அழுதுகொண்டிருந்த சாய் பிரியவை அக்கம்பக்கத்தினர் அழைத்து அவளுடைய கணவர் வீட்டில் தினம் எழும் வித்தியாசமான சத்தங்களைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இதையெல்லாம் கேட்ட பிறகு சாய் பிரியா, தன் வீட்டிற்கு கால் செய்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறாள். அதே போல் தன் அண்ணன் வரவும் அவருடன் சேர்ந்து வீட்டிற்குச் சென்ற சாய் பிரியா தன் கணவருடன் சேர்ந்து இருக்க முடியாது என்று நடந்ததை கூறியிருக்கிறாள்.
இந்த சம்பவங்கள் சாய் பிரியா மாமியாருக்குத் தெரிய தன் மகனின் விளையாட்டு அளவில்லாமல் போய்விட்டது. அவனை கண்டித்துள்ளோம் மறுபடியும் வீட்டிற்கு வந்துவிடு என்று கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார். பின்பு சாய் பிரியாவின் கணவர் தன் மாமனாருக்கு இருக்கும் மற்றொரு வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு வருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாய் பிரியவை அவளது கணவரும் மாமியாரும் திட்டியிருக்கின்றனர். இதற்கிடையில் சாய் பிரியா மொபைலை எடுத்த அவளது கணவர், அதிலுள்ள சாய் பிரியாவின் ஆண் நண்பர்களுக்குக் கால் செய்து சாய் பிரியாவை அவர்களுடன் தொடர்புப்படுத்தி அசிங்கமாக பேசியிருக்கின்றார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த சாய் பிரியா, உடனடியாக தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள். இதற்கிடையில் தன் கணவர் டைரியை பார்த்த சாய் பிரியா, அதில் முன்னுக்குப் பின் முரணாக வார்த்தைகள் இருந்ததைப் பார்த்து மிகவும் பயந்திருக்கிறாள். இதைப் பார்த்த அவளின் கணவர், அதெப்படி கேட்காமல் டைரியை எடுத்து பார்த்தாய் என்று சண்டை போட்டிருக்கிறார். அந்த டைரியிலுள்ள சில பக்கங்களை கிழித்து தன்னுடன் வைத்துக்கொண்ட சாய் பிரியா, அதை தன் வீட்டாரிடம் காட்டி நடந்த சண்டைகளை விவரித்து கணவருடன் வாழ விருப்பமில்லையென்று அழுதிருக்கிறாள்.
இந்த சூழலில் சாய் பிரியா என்னிடம் வந்து நடந்ததை விவரித்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டாள். அதன் பிறகு நான், சாய் பிரியாவின் கணவர் மனநிலை சரியாக இருக்கின்றதா? அவருக்கு குழந்தை பெற ஆரோக்கியமான உடல்நிலை இருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றேன். அதன்படி தன் கணவரை மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள வைத்த சாய் பிரியா, தன் கணவரிடம் மருத்துவ சான்றிதழைக் கேட்டிருக்கிறாள். சாய் பிரியாவின் கணவர் அனுப்பிய மருத்துவ சான்றிதழ் போலியானது என்பதை கண்டுபிடித்த பின்னர். விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தோம். இதையடுத்து சாய் பிரியாவின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சாய் பிரியாவுக்கு தீர்ப்பு சாதகமாகி அவளுக்கு விடுதலையுடன் சேர்ந்து திருமணத்திற்குப் போட்ட நகைகளும் கிடைத்து இவ்வழக்கு முடிந்தது.