குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
கலாவதி என்ற பெண்ணுடைய வழக்கு இது. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. அந்த பெண்ணும், அவளுடைய அப்பாவும், என்னை பார்த்து விஷயத்தை சொன்னார். அந்த பெண்ணுடைய கணவர், ஒரு கெமிக்கல் இஞ்சினியரிங் கம்பேனியில் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலே அவர்களுக்குள் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனைகள் வர ஆரம்பித்திருக்கிறது. ஒன்று, சந்தேகம் இரண்டாவது தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் மனைவி இருக்க வேண்டுமென்று கணவன் எண்ணம் கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதாவது ஒரு பொருள் கேட்டால் கூட, கணவனை கேட்ட பிறகு தான் அதை கொடுக்க முடியும் என்று அந்த பெண் சொல்லும் அளவுக்கு அவருடைய கணவனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கிறார்.
என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தீர்மானிக்கிற விஷயத்தில் அவர் மட்டும் தான் இருந்திருக்கிறார். மேலும், வார விடுமுறை நாட்களில் தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கிற்கு வரவழைத்து அவர்களோடு மது குடித்துக்கொண்டு சைட் டிஸ் செய்து தரவேண்டும் என மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதால், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம் என கலாவதி சொன்னாலும், நீ என்ன சொல்வது என கணவர் சண்டை போடுகிறார். இந்த மாதிரி சமயத்தில், கலாவதி மனதில் வேறுபாடு வர ஆரம்பித்திருக்கிறது. கலாவதியின் தம்பி, இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என இவளுடைய கணவனிடம் சொன்னாலும், அவனிடம் சண்டை போடுவதுமாய் இருக்கிறார். இதற்கிடையில் கலாவதி அம்மா, அவருடைய சொத்தை விற்கும் நேரத்தில், கலாவதிக்கும் பாகம் இருப்பதால் அந்த பணத்தை வாங்கி தன்னுடைய அக்கெளண்டில் போடுமாறு கணவன் தொல்லை கொடுக்கிறார். இதை கேட்டு சுதாரித்துக்கொண்ட கலாவதி, தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகள் பேரில் பாதி பாதியாக அந்த பணத்தை டெப்பாசிட் செய்து வீட்டுக்கு வருகிறார். இதை தெரிந்துக்கொண்ட அவளின் கணவன், அவளை சரமாரியாக அடித்து துன்புறுத்துகிறான். இதில் அவள் ரத்த காயமாகிறாள். இதையடுத்து, போலீஸ் ஸ்டேசனுக்கு கம்ப்ளைண்ட் கொடுப்பதாக வீட்டை விட்டு வெளியே சென்ற அவளை, வீட்டுக்கு வரவழைத்து சமாதானப்படுத்துகிறான். அடுத்த நாளும், போலீஸ் ஸ்டேசனுக்கு போகும் அளவுக்கு தைரியத்தை யார் கொடுத்தார் என மீண்டும் அவன் அவளிடம் சண்டை போடுகிறான். பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவள் அதனை பொறுத்துப் போகிறாள்.
அடுத்த வாரம், மீண்டும் தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களோடு மது குடித்து கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு அட்டகாசம் செய்திருக்கிறார். இதில் பயந்து போன கலாவதி, தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுகிறாள். நிலைமை சரியான பிறகு, பூட்டை திறந்த போது, யாரை உள்ளே பூட்டி வைத்திருக்கிறாய் என சண்டை போடுகிறான். அறையை விட்டு வெளியே வந்த பெண் பிள்ளைகளும், அப்பாவிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். தன்னுடைய பிள்ளைகள் தனக்கு எதிராக திரும்பியதற்கு கலாவதி தான் காரணம் என்ற கோபம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவளிடம் அவன் அடிக்கடி சண்டை போட்டு எரித்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதற்கிடையில், இவர்கள் தங்கியிருக்கும் வீடு கலாவதி பெயரில் தான் இருக்கிறது என்ற விஷயம் அவளுக்கு தெரியவருகிறது. ஒருநாள், தன்னுடைய வீட்டில் ஆசிட் மாதிரி எரிந்துப்போவதற்காக பயன்படுத்தக்கூடிய இரண்டு ஆசிட் பாட்டில்கள் இருப்பதை கண்டு பயந்து போன கலாவதி, தன்னுடைய பெற்றோர்களிடம் சொன்ன பிறகு, மகளை ஆசிட் வீசி எரித்துவிடுவான் என்ற பயத்தில் அவர்களும் கலாவதியையும் பெண் பிள்ளைகளையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்த சமயத்தில் தான் என்னை பார்க்க வந்தனர். என்னுடைய அறிவுரையின் பேரில், கணவனின் மிரட்டல்கள் குறித்தும், ஆசிட் வைத்திருப்பதால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது குறித்தும் போலீசில் கலாவதி கம்ப்ளைண்ட் கொடுத்தாள். டைவர்ஸ் வாங்க மனமில்லாமல், கொஞ்ச நாளைக்கு பிரிந்து வாழ கலாவதி நினைத்தாள். இந்து திருமண சட்டப்படி டைவர்ஸ் வாங்காமல் குறிப்பிட்ட காலத்தில் பிரிந்து வாழ முடியும். அதற்கு ஜுடிசியல் செப்பரேசன் என்ற பெயர் இருக்கிறது. அப்படி வாங்கிவிட்டால், மனைவியின் அனுமதியில்லாமல் கணவனால் அவளை தொட கூட முடியாது. டைவர்ஸ் வாங்காமல் கணவன் மனைவியாக பிரிந்து இருப்பார்கள். அதன்படி, இந்து திருமண சட்டம் 10ஆம் பிரிவின் கீழ், இரண்டு வருடத்திற்கு மட்டும் அந்த கேஸை போடலாம் என நினைத்து பெட்டிசன் போட்டோம். இதற்கிடையில், கர்ப்ப பையில் பிரச்சனை இருப்பதால் அவள் அடிக்கடி மருந்தகத்துக்கும், டாக்டரிடம் செல்வதால், அவளுடைய நடத்தை சரியில்லை, வேறு ஒருவனோடு தொடர்பில் இருக்கிறாள் என்றெல்லாம் அவன் கேஸ் போட்டு டைவர்ஸ் கேட்டான். இதற்கிடையில் ஒன்றரை வருடமானது. இதனிடையே, ஒரு நிகழ்ச்சிக்கு கலாவதி தன்னுடைய குடும்பத்தினருடன் செல்ல, அங்கு வந்த கலாவதி கணவன், அவருடைய அக்கா இன்னும் சில பேர் கலாவதி கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர். இது ஒரு கட்டத்தில், கணவருடன் கூட வந்தவர்கள், கலாவதியில் சேலையை பிடித்து இழுத்துவிடுகிறார்கள். மேலும், அதை தடுக்க வந்த கலாவதியின் தம்பியையும் அடித்து விடுகிறார்கள்.
இதில் மனமுடைந்த கலாவதி, போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று டொமெஸ்ட் வைலன்ஸ் என்ற கம்ப்ளைண்டும், மானபங்க படுத்துதல் கம்ப்ளைண்டும் ஆதாரத்தோடு கொடுக்கிறாள். டைமெஸ்ட் கம்ப்ளைண்டிற்காக மேஜிஸ்திரேட் முன் இந்த கேஸ் ஒரு கோர்ட்டில் நடக்கிறது. அதே போல், கிரிமினல் கம்ப்ளைண்டிற்காக இன்னொரு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. குடும்ப நீதிமன்றம், இன்னும் இரண்டு நீதிமன்றம் என மூன்று நீதிமன்றத்திலும் கேஸ் நடப்பதால் அவன் அங்குமிங்குமாய் அழைகிறான். அதன் பிறகு, மெயிண்டெனன்ஸ் பெட்டிசன் ஒன்றை போட்டு டைவர்ஸ் கேட்டோம். அதன் பிறகு மீடியேசன் போனோம். இந்து திருமண சட்டப்படி, ஒரு வீடு மனைவி பெயரில் இருந்தால் அந்த சொத்து அனைத்தும் அவளுக்கே சொந்தம். அதன்படி, அந்த வீட்டை கலாவதி கேட்க, அவன் மறுத்தான். இரண்டாவது பெண்ணின் திருமண செலவை கணவன் தான் பார்க்க வேண்டும் என்று அவள் கண்டிசன் போட, மீடியேசனில் மியூட்ச்சுவல் கன்செண்டில் இருவருக்கும் விவகாரத்து ஆனது. இப்போது கலாவதி, அந்த வீட்டில் இருக்கிறாள். அதன் பிறகு, கலாவதியின் பெண்கள், அவருடைய மருமகன்கள், மொத்த குடும்பமும் சேர்த்து கலாவதிக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.