குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
எமிலி என்ற பெண்ணுடைய வழக்கு இது. அப்பாவும் பெண்ணுமாக என்னை சந்திக்க வந்திருந்தனர். ஒரு பதினைந்து வருடம் முன்பு நடந்தது. கணவன் வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் கேட்டு வந்திருக்கிறது. பெண்ணிற்கும் சேர்ந்து வாழ விருப்பமில்லை. ஆனால் பெண்ணின் தந்தை சேர்த்து வாழ வைக்க விரும்பினார். பையன் ஐம்பதாயிரம் சம்பளத்தில் நல்ல வேலை பார்த்து ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கியிருக்கிறார். இருவருக்கும் கோர்ட்டில் அப்பியர் ஆகி கவுன்சிலிங் ஏற்பாடானது. அந்தக் கணவனோ, பெண்ணை முழுவதும் பேசவிடாமல் நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்தப் பெண் அடுத்த கவுன்சிலிங்கில் தன் கணவன் குடும்பம் பணமே குறியாக இருப்பதாக சொன்னாள். தன் மாமியார் என் அப்பாவிடம் வைர கம்மல் எனக்கு வேண்டும் என்று சொல்லி வாங்கி கொடு என்று கேட்டார். நான் மறுத்ததும் அங்கிருந்து தான் முதல் பிரச்சனை ஆரம்பித்தது என்று சொன்னாள்.
அதன்பின்னர், கணவனும் மனைவிக்கு ஒத்துழைக்காமல் நடந்து கொண்டார். ஒருமுறை அம்மாவிடம் மரியாதையாக நடந்து கொள் என்று கையை கூட அடிக்க கையை ஓங்கிவிட்டார். இது தன்மான பிரச்சனையாக மாற அப்பா வீட்டிற்கு சென்று விடுகிறாள். கணவன் மீண்டும் அழைத்து செல்கிறார். தொடர்ந்து மாமியார் இன்னல்களைக் கொடுக்க பெண் அங்கு இருக்க சிரமப்பட்டு பெற்றோர் வீட்டிற்கே சென்று விட பெண்ணின் தந்தை மருமகனிடம் தனி குடித்தனம் போக சொல்லியும் மறுத்து விடுகிறார். ஆனால், வாடகை தான் கொடுப்பதாக இந்தப் பெண் சொல்லவும் தனி வீடு பார்க்கப்படுகிறது. ஒன்றும் ஒத்துவரவில்லை.
அதுவரை கணவனுடன் மாமியார் வீட்டில் சேர்ந்து வாழும்படி இருக்கும்போது சிரமமாக நாட்கள் கழிகிறது. இருவருக்கும் நிறைய ஈகோ கிளாஷ் ஆகிறது. பெண்ணின் தந்தையும் ஆற்றாமையால் தான் நன்றாக 25 பவுன் போட்டு தானே திருமணம் செய்து வைத்தேன் என்று சொல்ல அது இன்னும் தவறாக பார்க்கப்படுகிறது. இருவருக்கும் உறவே அடிபட்டுப்போகிறது. பெண்ணின் தந்தை போலீசில் வாழவே விடுவதில்லை என்று புகார் அளிக்க கணவர் பக்கம் பெண் இங்கு வந்து வாழ்வதே இல்லை தந்தை வீட்டிலே இருக்கிறார் என்று சொல்ல போலீஸ் அதிகாரி கணவனிடம் புத்தி சொல்லி தனி வீடு பார்க்க சொல்லி அனுப்பி வைக்கிறார். இதன் பின்னர் தான் என்னிடம் வழக்குக்கு வந்தது.
இந்த பெண் முழுமையாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். தனக்கு மாதாமாதம் இருபத்தைந்து ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பெட்டிஷன் போடுகிறாள். விசாரணை நடந்தது. கணவன் பொருளாதாரம் , கடமை, கடன்களை சுட்டி காட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூற கோர்ட்டில் மறுத்து அவர் வேலை பார்க்கும் தனியார் கம்பெனிக்கு ‘subpeona’ கேட்டு மொத்த தகவலை வாங்கினோம். அவர் சொந்தமாக வீடு வாங்கி இ.எம்.ஐ கட்டுவது தெரிந்து லாபம் தரக்கூடிய தனது சொத்தில் செலவழிப்பதை காட்டிலும் மனைவிக்கு செட்டில் பண்ணவேண்டிய மெயின்டனன்ஸ் பணம் கொடுப்பது தான் தகும் என்று நாங்கள் வாதாடினோம். ஒரு பத்தாயிரம் மட்டுமே கொடுப்பதாக ஒத்துக்கொள்ளப்பட்டது. மேலும், திருமண செலவில் செய்த ஐந்து லட்சம், கொடுத்த பணம், நகை எல்லாம் கேட்க இரண்டு வருடம் தள்ளி போனது. மீடியேஷன் போட்டும் பலனில்லை. ஒருவழியாக பெண் வீட்டில் இதற்கு மேல் முடியாது என்று இறங்கி வர ஐந்து லட்சம் மட்டுமே பெற்று தர முடிந்தது, மாதம் பத்தாயிரம் கொடுக்க இருந்ததும் வழக்கு முடிந்ததும் கொடுக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் விவகாரத்து பெற்றனர். அந்த பெண் மனதளவில் தேறி வர கடினமாக இருந்தது. மிகவும் பாதித்த வழக்கு இது.