Skip to main content

இப்படியும் ஒரு பெண்ணா?இதையெல்லாம் விற்க முடியுமா?-வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:39

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

advocate-santhakumaris-valakku-en-39

 

தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்தும், அதை நடத்திய விதம் குறித்தும் நம்மோடு பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.

 

மதுரையைச் சேர்ந்த தரணி என்பவருடைய வழக்கு இது. முதல் திருமணம் நடந்து அந்த வாழ்க்கை சரியாக இல்லாததால் டைவர்ஸ் செய்து கொண்டு, அடுத்ததாக புது வாழ்க்கை ஆரம்பிக்க காத்திருந்தவருக்கு அவரைப் போலவே முதல் திருமண வாழ்க்கையை டைவர்ஸ் செய்து கொண்ட பெண் கிடைக்கிறாள். அவளுக்கு ஏழு வயதில் ஒரு குழந்தையும் உண்டு. மேட்ரிமோனி வழியாக தரணியை தொடர்பு கொண்ட அந்த பெண் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கிறாள். தரணிக்கும் அவரது குடும்பத்திற்கும் பிடித்துப் போகவே அவரது அக்கா தான் முன்னின்று எல்லாவற்றையும் செய்கிறார். பெண்ணுக்காக 30 பவுன் நகை தரணி போடுகிறார். 

 

இரண்டாம் திருமணம் என்பதால் தரணி பக்கத்திலிருந்து 50 பேர் வந்திருக்கிறார்கள். பெண் தரப்பிலிருந்து 4 பேர் தான் வந்திருக்கிறார்கள். ஏன் குறைவான நபர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேட்டதற்கு நிலத்தகராறில் உறவுகள் நெருக்கமாக இல்லை என்றிருக்கிறாள். திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் டாக்டரை அணுக தரணியின் அக்கா வலியுறுத்தியுள்ளார். ஆனால் டாக்டரிடம் போனவள் தரணியிடம் ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறாள். 

 

தரணியின் அக்கா சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றதற்காக அவளோடு பேசக்கூடாது என்றும் அவளது வீட்டு நிகழ்வுகளுக்கு போகக் கூடாது என்றும் அழுத்தம் தந்திருக்கிறாள். சில மாதங்களுக்குப் பிறகு வேறு டாக்டரைப் பார்க்கலாமே என்றதற்கு நான் கருப்பையை விற்று விட்டேன். அதனால் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றிருக்கிறாள். இதனால் விரக்தி அடைந்த தரணி கொஞ்சம் பேசிக்கொள்வதில்லை. ஆனால் இவள் தொடர்ச்சியாக அவனுக்கு தொல்லை தந்திருக்கிறாள்.

 

தரணியின் வேலை சம்பந்தமாக யார் பேசினாலும் ஏன் அவர்களோடு பேசுகிறாய் என்று சந்தேகப்பட்டு இருக்கிறாள். தனக்கு வங்கி கடன் இருக்கிறது அதை கட்ட பணம் வேண்டும் என்று தொல்லை தந்திருக்கிறாள். எப்போதுமே பணம் மட்டுமே பிரதானமாய், அன்பை முன்னிறுத்தாமல் தொல்லை தந்ததால் தரணி டைவர்ஸ் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

 

கோர்ட்டில் தன் பிள்ளைக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று அவள் மனு போட்டபோது தரணிக்கு பிறக்காத குழந்தைக்கு அவர் பராமரிப்பு தொகை தர வேண்டியதில்லை என்றும், அத்தோடு கருப்பையை விற்கக் கூடாது, விற்கவும் முடியாது அதனால் பொய் சொல்லியது முறைகேடு என்றும் வழக்கு தரணிக்கு சாதகமாக அமைந்தது. அதன் பிறகே தரணி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.