இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ., அக்டோபர் 2020ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2021ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை நேற்று (15.04.2021) வெளியிட்டது. அதன்படி, ஒப்பந்த பட்டியலில் 'A+' பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நீடிக்கின்றனர்.
'A' பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், ராகுல், ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 'B' பிரிவில் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 'C' பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஹால், சிராஜ் ஆகிய 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
A+' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 5 கோடியும், 'B' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியும், 'C' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் ஆண்டு வருமானமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அண்மையில் இந்தியாவிற்கு அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெறவில்லை. நடராஜனுக்கு இடம் கிடைக்காதது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களும் எழுந்தன.
ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி, ஒரு வீரர் வருடாந்திர ஒப்பந்தம் பெற, மூன்று டெஸ்டுகளோ, 7 ஒருநாள் போட்டிகளோ, 10 இருபது ஒவர் போட்டிகளோ ஆடியிருக்க வேண்டும். ஆனால் நடராஜன் 2 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும், 4 இருபது ஓவர் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். எனவே வருடாந்திர ஒப்பந்தம் பெறுவதற்கான அளவுகோலை அவர் எட்டவில்லை. இதனால் அவர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
அதேபோல் இஷான் கிஷன் 2 இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். சூர்யகுமார் யாதவ், மூன்று இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடியுளார். எனவே இவர்களுக்கும் வருடாந்திர ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.