ஐ.பி.எல். சீசன் 11ன் தொடக்கத்தில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மீண்டும் மோத இருக்கின்றன. இந்தத் தொடரில் எழுத்துப்பூர்வமாக எந்தளவுக்கு பலம்வாய்ந்தது என புகழப்பட்டதோ, அதை அப்படியே பொய்யாக்கி புள்ளிப்பட்டியலின் எல்லையில் நின்றுகொண்டிருக்கிறது பெங்களூரு அணி.
அதேசமயம், பெங்களூரு அணியை விட சிறப்பாக ஆடினாலும், கொல்கத்தா அணியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை. பெங்களூரு அணி செய்யும் அதே தவறுகளை அப்படியே பிரதி எடுத்தாற்போல் சொதப்பிக் கொண்டிருக்கிறது கொல்கத்தா. இந்த சீசனில் மிகப்பெரிய காயம்பட்டிருந்த டெல்லி அணிக்கே புதிய உத்வேகம் கிடைக்கும் அளவிற்கு, கடைசி 5 ஓவர்களில் 79 ரன்களை தாரைவார்த்ததே அதற்கு சான்று. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தாலும், தொங்கிக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் இருந்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த அணி.
இந்த இரண்டு அணிகளும் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் மோத இருக்கின்றன. பெங்களூரு 9.70 மற்றும் கொல்கத்தா 9.28 என மோசமான எக்கானமி ரேட்டுகளை இந்த அணிகள் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் பெங்களூரு அணியின் எக்கானமி ரேட் 13.30 என்பது பெருத்த கவலை. இந்த இரண்டு அணிகளும் மோதிய 21 போட்டிகளில் 12 போட்டிகளில் கொல்கத்தா அணியே முன்னிலையில் இருக்கிறது. சின்னச்சாமி மைதானத்தில் தலா நான்கு போட்டிகளில் இரண்டு அணிகளும் வென்றிருக்கின்றன.
இன்றைய போட்டியில் மொயீன் அலி மற்றும் குல்வந்த் கெல்ஜோரியா ஆகியோர் பெங்களூரு அணிக்காக இறங்கலாம். ஆனால், குறைகளைக் களையாமல் இறங்குவது ஏமாற்றத்தையே தரும். அணித்தலைமை அதற்கு தயாராக இல்லாதது துயரத்திலும் துயரம். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்கள், கடந்த சீசனை மிரட்டிய பவுலர்கள் என கலக்கலாக களமிறங்கி, ஜொலிப்பதற்கான வாய்ப்பைத் தேடி அலையும் பெங்களூரு அணிக்கு இனிவரும் எல்லாமே வாழ்வா? சாவா? போட்டிகள். ‘2015, 2016ஆம் ஆண்டுகளில் நாங்கள் மீண்டுவந்த வரலாறை உலகறியும். நீங்களும் பார்ப்பீர்கள்’ என செகால் சொன்னது நினைவுக்கு வருகிறது. வரலாறு திரும்புமா?