கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் இந்த மாதம் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியாக சென்னை அணி மும்பை அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் முக்கிய வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். ஹர்பஜன்சிங் இடத்தை நிரப்ப சென்னை அணியில் பிற சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவரது விலகல் பெரிய இழப்பாக இருக்கப்போவதில்லை. அதே நேரத்தில் ரெய்னாவின் இடத்தை நிரப்ப யாரைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் சென்னை அணி தடுமாறி வருகிறது. தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் சென்னை அணி துரிதமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணி வீரர் வாட்சன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ரெய்னாவின் இடத்தை நிரப்புவது கடினம். கடந்த கால தொடர்களில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்றால் அது ரெய்னா தான். அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக உள்ளது. ரெய்னா இது போன்ற மைதானங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அந்த இடத்திற்கு முரளி விஜய் சரியான தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தாண்டு அவருக்கு நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்" என்றார்.