இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் தன்னை மிக மோசமாக நடத்தி, அனைவரது முன்னிலையிலும் அவமானகரமாகப் பேசியதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் காரணமாக நீண்ட காலமாக இன்சுலின் பயன்படுத்தும் வாசிம் அக்ரம், தான் எங்கு சென்றால் உடன் இன்சுலின் மருந்தையும் எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் குளிர்பதனப் பெட்டியில் இன்சுலினை வைத்து எடுத்து சென்றுள்ளார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் இன்சுலினை அந்த பெட்டியிலிருந்து எடுத்து பிளாஸ்டிக் பையில் வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அப்போது தன்னை அவமானப்படுத்தும் விதமாக அங்கிருந்த அதிகாரிகள் பேசியதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மான்செஸ்டர் விமானநிலையத்தில் நான் மிகவும் மனமுடைந்து போனேன். நான் என் இன்சுலின் பெட்டியுடன் தான் உலகம் முழுதும் சுற்றி வருகிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னை யாரும் இப்படி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டதில்லை. மிகவும் மோசமான முறையில் அவர்கள் என்னை விசாரித்தது இழிவு படுத்துவதாகவே இருந்தது" என பதிவிட்டார்.
அவரின் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள மான்செஸ்டர் விமானநிலைய அலுவலகம், இது தொடர்பாக புகார் அளிக்கும்படியும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.