13-வது ஐபிஎல் தொடரானது தொடங்குவதற்கு இன்னும் 17 நாட்களே உள்ளன. மார்ச் மாதமே தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டி கரோனா காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கத்தை அடுத்து தள்ளிப்போனது. இந்த மாதம் வரையிலும் இந்தியாவில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையே இருந்து வருகிறது.
பிசிசிஐ நிர்வாகமோ இந்தாண்டு ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருந்தது. அதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுத்தது. அதற்கு இந்திய அரசு மற்றும் அமீரக அரசின் அனுமதியும் கிடைத்ததால் பிசிசிஐ இத்தொடர் தொடங்கும் நாள், மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளை அறிவித்தது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பிசிசிஐ கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள், உதவியாளர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனான விராட் கோலி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில் அவர், "சில மாதங்களுக்கு முன்பு வரை ஐபிஎல் நடக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. தற்போது இது உறுதியாகிருக்கிறது. இதை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் நடத்தி முடிக்க வீரர்கள் ஒத்துழைக்க வேண்டியது நமது கடமையாகும். பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும், சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தினாலே போதுமானது. நாம் இங்கு ஊரைச் சுற்றிப்பார்க்கவோ, ஜாலியாக இருப்பதற்கோ வரவில்லை. பிசிசிஐ நமக்கு விதித்துள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றுவோம்" என்றார்.