இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, இருபது ஓவர் உலககோப்பைக்கு பிறகு இந்தியாவின் இருபது ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து இந்தியாவின் இருபது ஓவர் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்தசூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், தற்போது இருபது ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருக்கவேண்டும் என கருதுவதாகவும், அதுகுறித்து இந்தியா- தென்னப்பிரிக்கா அணி தேர்வு செய்யப்படும்போது தேர்வுக்குழு விவாதிக்கபோவதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் நேற்று தென்னப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த தேர்வு குழு, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக அதிரடியாக அறிவித்தது. இந்தநிலையில் விராட் கோலி தானாகவே ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிருந்து விலகுவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 48 மணிநேரம் அவகாசம் அளித்ததாகவும், இருப்பினும் விராட் கோலி பதவியிலிருந்து விலகாமல் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் அவரை இந்திய கிரிக்கெட் வாரியமே நீக்கியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.