இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃபாட்ர்டு மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அதிவேகமாக 2ஆயிரம் ரன்கள் குவித்த விரர் என்ற சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
இந்திய கேப்டன் விராட் கோலி இதுவரை 55 டி20 போட்டிகளில் களமிறங்கி, 1,992 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 48.48 ரன்கள் ஆகும். எனவே, 2,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு வெறும் 8 ரன்களே தேவை. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் ஆகியோர் 2,000 ரன்களைக் கடந்துள்ளனர். குறிப்பாக சோயிப் மாலிக் தனது 59ஆவது போட்டியில்தான் இந்த மைல்கல்லை எட்டினார். எனவே, இன்றைய போட்டியில் விராட் கோலி எட்டு ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த நான்காவது வீரர் மற்றும் அதிவேக 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அடைவார்.
இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி மிகவும் சொதப்பலாக ஆடக்கூடியவர் என்ற கருத்து நிலவுகிறது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடவில்லை. எனவே, இந்தத் தொடரில் அந்த எண்ணத்தை அவர் மாற்றுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.