இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் நாளை இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்கள் நாளைய போட்டியை ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய கேப்டன் கோலி 104 ரன்கள் எடுத்தால் பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ள சச்சின் மற்றும் பிரையன் லாராவின் இமாலய சாதனையை முறியடிக்கலாம்.
சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் (453 இன்னிங்ஸ்) எட்டிய சாதனையை சச்சின், மற்றும் லாரா ஆகியோர் கூட்டாக வைத்துள்ளனர். தற்போது வரை 131 டெஸ்ட், 222 ஒருநாள் போட்டிகள், 62 இருபது ஓவர் போட்டிகள் என 415 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 19,896 ரன்களை குவித்துள்ளார்.
நாளைய ஆட்டத்தில் அவர் 104 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 20000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நன்கு விளையாட கூடிய கோலி நாளைய போட்டியில் இந்த சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.