2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், இந்த அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவாரா என கேள்வியெழுந்துள்ளது.
இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாததாலும், பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததாலும் அவரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் சேர்ப்பது குறித்து அடுத்த சில நாட்களில் தேர்வுக்குழு முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டால், ஷார்துல் தாகூர் அல்லது தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவார்கள் எனவும் அந்த தகவல்கள் கூறின.
இந்தநிலையில், இந்த ஐபிஎல் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர், நெட் பவுலர்களில் ஒருவராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்த இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டராக அல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடப்போகிறார் என்றும், ஒருவேளை அவருக்கு காயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீசும் திறமையுள்ள வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையியே இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி, இன்று (13.10.2021) இரவு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.