உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களுள் ஒருவரான உசைன் போல்ட், சமீபத்தில் தமது ஓய்வினை அறிவித்தார். 31 வயதான இவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். மின்னல் மனிதர் என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் தமது ஓய்வினை அறிவித்தபோது, எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கால்பந்தாட்ட வீரராக மாறப்போவதாக தெரிவித்திருந்தார்.
இதேபோல், அவர் பலமுறை தெரிவித்திருந்தாலும், தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு க்ளப் அணியான பொரூஷியா டோர்ட்மண்ட் என்ற அணியில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். இந்நிலையில், தற்போது அந்த அணியில் இருந்து வெளியேறி, புதிய அணியில் சேர்ந்து விளையாடுவதற்காக சிட்னி சென்றுள்ளார். அங்குள்ள ஏ லீக் க்ளப் என்ற அணிக்காக அவர் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி பேசியுள்ள உசைன் போல்ட், ‘நான் ஏற்கெனவே கால்பந்து விளையாடப் போவது பற்றி கூறியிருந்தேன். அதனால்தான் இப்போது விளையாடத் தொடங்கியிருக்கிறேன். நான் இந்த விஷயத்தில் எந்தளவிற்கு தகுதியானவன் மற்றும் அதை எப்படிச் செய்வேன் என்பதை நன்கு அறிவேன். அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார். அவர் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.