இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில தினங்களுக்கு முன்னால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தோனி இந்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். பல நாடுகளைச் சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்கள் தோனிக்காக ஒரு போட்டியினை நடத்தி அதில் அவருக்கு முறைப்படி பிரியா விடை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளினை தற்போது பி.சி.சி.ஐ. கவனத்தில் எடுத்துள்ளது. அதன்படி தோனிக்காக ஒரு போட்டியினை நடத்த தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தோனிக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
"உங்களது பாணியில் ஒரு காணொளியை வெளியிட்டு ஓய்வினை அறிவித்தீர்கள். அது இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களது முடிவு அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்த போதிலும்...." எனத் தொடங்கும் அந்தக் கடிதம் இரண்டு பக்க அளவில் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தோனி பிரதமரின் கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி, "கலைஞன், ராணுவவீரர், விளையாட்டு வீரரின் எதிர்பார்ப்பெல்லாம் பாராட்டு தான். தன்னுடைய கடின உழைப்பும், தியாகமும் வெளியே தெரிய வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கும். பிரதமர் மோடி அவர்களே உங்களுடைய பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.