16 ஆவது ஐபிஎல் சீசனின் 32 ஆவது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில் முதல் பந்திலேயே கோலி அவுட்டானார். போல்ட் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற டுப்ளசிஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். விராட் கடந்த ஆண்டும் பச்சை ஜெர்ஸியில் முதல் பந்திலேயே அவுட் ஆனதும் இம்முறையும் முதல் பந்திலேயே அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இரண்டு விக்கெட்களுக்கு பின் இணைந்த டுப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துகளை சிதறடித்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 6 முறை முதல் ஓவர்களை போட்டுள்ள போல்ட் 36 பந்துகளில் 32 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளார். அதில் 6 விக்கெட்களைக் கைப்பற்றி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்களை இழந்து 189 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77 ரன்களையும் டுப்ளசிஸ் 62 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் போல்ட், சந்தீப் ஷர்மா தலா 2 விக்கெட்களையும் அஷ்வின், சாஹல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
190 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ராஜஸ்தான் அணியில் முதல் ஓவரிலேயே அபாய ஆட்டக்காரர் பட்லர் வெளியேற ராஜஸ்தான் அணி பொறுமையாக ரன்களை சேர்த்துக்கொண்டு இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக படிக்கல் 52 ரன்களையும் ஜெய்ஸ்வால் 47 ரன்களையும் ஜூரல் 34 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்துவீசிய பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்களையும் சிராஜ், டேவிட் வில்லி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக மேக்ஸ்வெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இப்போட்டியில் தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.