சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித், கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தடை காலம் முடிந்து மீண்டும் விளையாட வந்துள்ள அவர், தற்போது இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இதில் நேற்றைய ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் இந்திய கேப்டன் கோலியின் சாதனை ஒன்றை அவர் முறியடித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் மோசமான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை 284 வரை கொண்டுவர உதவியது ஸ்மித்தின் சதம். நேற்றைய ஆட்டத்தில் அவர் மொத்தமாக 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் அவர் தனது 24 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், மிக விரைவாக 24 சதங்களை கடந்த வீரர் என்ற கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
விராட் கோலி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருந்தார். ஸ்மித் 118 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து அசத்தி உள்ளார். மேலும் இந்த பட்டியலில் டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸில் 24 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.