பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை அணி வீரர்கள் மீது நடுவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டால், அந்த அணியின் வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ளது. தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் உடன் மோதிய முதல் போட்டியில் 226 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், செயிண்ட் லூயிஸில் உள்ள டேரன் சமி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, 253 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. அப்போது இலங்கையின் தனஞ்செயா டிசில்வா பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து, மூன்றாவது நாளின் தொடக்கத்தில் நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்தபோது, இலங்கை அணி வீரர்கள் மைதானத்திற்கு வராமல் டிரெஸ்ஸிங் ரூமிலேயே இருந்தனர். இதையடுத்து, போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் உடன் இலங்கை கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் சந்தித்துப் பேசி மீண்டும் களத்திற்கு வர சம்மதித்தனர். இதனால், போட்டி இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இதற்கு அபராதம் வழங்கும் விதமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், இலங்கை வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.