இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ராகுல் டிராவிட், மீண்டும் இந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு வரும் நவம்பர் மாதத்தில் முடிவடையவுள்ளது என்பதால், அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என அந்த கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வயது வரம்பு 60 ஆக இருக்கும் நிலையில், ரவி சாஸ்திரிக்கு ஏற்கனவே 59 வயதாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.