ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று (27.08.2021) இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதிசெய்தார்.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளி உறுதியாகியுள்ளது. பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்லப்போவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் எந்த இந்தியரும் காலிறுதிவரை முன்னேறியதில்லை.
அரையிறுதிப் போட்டியில் வென்ற பின்னர் பேசிய பவினாபென் படேல், "நான் என்னை மாற்றுத்திறனாளி என கருதியதே இல்லை. இன்று நான், முடியாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.