இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் பதக்கங்களைக் குவித்து வருகின்றன.
மகளிர் ஒற்றையர் பேட்மிட்டன் பிரிவில் பிவி சிந்து, ஆசிய பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்திருந்தார். இதன்மூலம், வெள்ளி அல்லது தங்கம் என ஏதாவதொரு பதக்கம் உறுதியானது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சமீபகாலமாக இறுதிப்போட்டி வரை தகுதிபெறும் சிந்து, அதில் வெற்றிபெறாமல் வரும் சூழல் இந்தப் போட்டியில் மாறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய இறுதிப் போட்டியில், தாய்வானின் டை ஜூ யிங் மற்றும் சிந்து ஆகியோர் மோதினர். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான டை ஜூ யிங் தொடக்கத்தில் இருந்தே மிகச்சிறப்பாக ஆடினார். டை ஜூவின் கையே ஆட்டத்தில் ஓங்கியிருந்தது. இந்தப் போட்டியில் 13 - 21 மற்றும் 16 - 21 என்ற நேர் செட்களில் டை ஜூவிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன்மூலம், ஆசிய பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.