காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஏற்கெனவே, பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியிருந்த நிலையில், தற்போது துப்பாக்கி சுடும் போட்டியிலும் அது பிரதிபலித்துள்ளது.
ஏழாவது நாளான இன்று டபுள் ட்ராப் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் நடந்த நான்கு சுற்றுகளில் 96+2 என்ற கணக்கில் அவர் முதலிடம் பிடித்தார். ஆதிரேலியாவின் எம்மா காக்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் லிண்டா பியர்சன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். சிறப்பாக ஆடிய இந்தியாவின் வர்ஷா வர்மன் நான்காவது இடத்தையே பிடித்தார்.
இந்த ஆண்டு காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்தியவைச் சேர்ந்த வீரர்கள் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். 12 தங்கம், 2 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என இந்தியா ஒட்டுமொத்தமாக 23 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.