2006ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனியை குறிவைத்து வேண்டுமென்றே பீமர் வகை பந்துகளை வீசினேன், பின் அவரிடம் அதற்கு மன்னிப்பு கேட்டேன் என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இந்திய அணி 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது பைசலாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தோனி அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தைப்(148) பதிவு செய்தார். அப்போட்டியானது ட்ராவில் முடிந்தது. அந்தப் போட்டியின் போது நடைபெற்ற சம்பவம் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் பேசும் போது, "என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அப்போது தான் முதல்முறையாக பீமர் வகை பந்துகளை வேண்டுமென்றே வீசினேன். அந்தப் போட்டியில் தொடர்ந்து எட்டு முதல் ஒன்பது ஓவர் வரை வீசினேன். தோனி தொடர்ந்து அடித்து ஆடி சதத்தைப் பதிவு செய்தார். அது என்னை விரக்தி அடையச் செய்துவிட்டது. அதனால்தான் அப்படிப் பந்து வீசினேன். பின் தோனியிடம் மன்னிப்பு கேட்டேன். இருந்தாலும் அந்தத் தவறைச் செய்திருக்கக் கூடாது" என்றார்.