ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்த போது இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் நடந்த முந்தைய ஆட்டங்களில் பெரிதாக விளையாடாத வாட்சனை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில நாட்களாக எழ ஆரம்பித்தன. இந்நிலையில் வாட்சனின் இந்த இன்னிங்ஸ் அவற்றிற்கு முடிவு கட்டியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு ஆட்டநாயகன் விருதை பெற்ற வாட்சன் பேசுகையில், "நான் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாதது எனக்கே தெரிந்தது. இந்நேரம் நான் மற்ற அணிகளில் இருந்திருந்தால் கண்டிப்பாக என்னை நீக்கிருப்பார்கள். ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளமிங் என்மீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.