16 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடந்த லீக் ஆட்டங்களில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்படி குஜராத், லக்னோ, மும்பை, சென்னை அணிகள் ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி இமாலய வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் சேவாக், 16 ஆவது ஐபிஎல் தொடரில் தன் நிலைப்பாட்டின்படி டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் அதிக வாய்ப்புகளை பெறுகிறார்கள். எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ரிங்கு சிங் தான். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தது இதுவே முதன்முறை. ரிங்கு சிங் மட்டுமே அச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். அடுத்து ஷிவம் துபே. இதுவரை 33 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக்ரேட் 160 ஆக உள்ளது. கடந்த சில சீசன்கள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் நடப்பு தொடரில் சிக்ஸர்களை பறக்கவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் வந்துள்ளார்.
மூன்றாவதாக ஜெய்ஸ்வால். அவரது துல்லியமான பேட்டிங் திறன் அவரை தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டுகிறது. நான்காவதாக சூர்யகுமார் யாதவ். சர்வதேச கிரிக்கெட்டில் சிலமுறை ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதேபோல் தான் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களிலும் விக்கெட்களை பறிகொடுத்தார். ஆனால் பிற்பாதியில் தனது பாணி ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பினார். ஐந்தாவதாக ஹென்ரிச் க்ளாசன். ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அவர் அந்த அணிக்காக அதிக ரன்களை குவித்துள்ளார்” என்றார்.