உலகக் கோப்பையின் 32 வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் லாதம் பவுலிங் தேர்வு செய்தார். பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா 24 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். பின்னர் இணைந்த டி காக், வேன் டெர் டுசைன் இணை நியூசிலாந்து பந்து வீச்சை பொறுமையாக எதிர்கொண்டாலும், அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் என வான வேடிக்கை காட்டினர். சிறப்பாக ஆடிய டி காக் இந்த உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக ஆடிய டி காக் 114 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வேன் டெர் டுசைன், மில்லர் உடன் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார். சதம் அடித்த அவர் தனது அதிரடியை நிறுத்தவில்லை. ஒரு பக்கம் மில்லர் சிக்ஸர்களில் கவனம் செலுத்த, டுசைன் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என விளாசி, 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வழக்கம்போல அதிரடி காட்டிய மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 2 விக்கெட்டுகளும், போல்ட், நீசம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து ஆடி வருகிறது.
- வெ.அருண்குமார்