2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் தோனி சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்த தருணத்தை தற்போது வரை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால் தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா 15 பேர் கொண்ட இந்திய அணிக்கான குழுவில் இடம்பெறவில்லை.
அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தான் இடம்பெறாதது குறித்து ரோஹித் சர்மா பகிர்ந்ததைத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜெமிமா கூறியுள்ளார். ரோஹித் சர்மாவுடனான கலந்துரையாடல் எப்படி உத்வேகத்தை அளித்தது என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து ஒரு மாத காலம் வரை மன உளைச்சலில் இருந்ததாகவும் யுவராஜ் சிங் மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருந்ததாகவும் கூறினார். அவர், நான் உள்ளுக்குள் அழுததாக கூறிய பொழுது எனக்கு உண்மையில் கண்ணீர் வந்தது என ஜெமிமா கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கடினமான நேரங்கள் வரும்பொழுது நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது, அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது நடக்கும் (அல்லது) நடக்காது போனாலும் பரவாயில்லை என அவர் கூறியதாகவும் ஜெமிமா தெரிவித்தார்.