கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 19-ஆம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் ஷர்மா கடந்த ஆண்டு துவக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கினார். தன்னுடைய அதிரடியான ஆட்டம் மூலம் 405 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் இந்தாண்டும் ரோகித் ஷர்மா துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. மும்பை அணி ரசிகர்கள், அணி நிர்வாகத்திடம் இதுகுறித்து கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா இது குறித்து தன்னுடைய சமீபத்திய நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் நான் அனைத்து போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினேன். இந்தாண்டும் அதே இடத்தில் விளையாட தயாராக இருக்கிறேன். நான் திறந்த மனதுடன் உள்ளேன். இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது அணி நிர்வாகம் தான். இந்திய அணிக்காக விளையாடும் போதும் என்னுடைய நிலைப்பாடு இதுதான்" என்று பேசினார்.