Skip to main content

கில்கிறிஸ்ட்... இவரு... அப்பறம் யாருமில்ல - ரிஷப் பந்தின் புதிய சாதனை!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

rishabh pant

 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதற்குப் பிறகு, ஆடிய இந்திய அணி தடுமாறினாலும் ரோகித், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்தார். பந்த் 118 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இந்தியாவில் இது பந்த்தின் முதல் சதமாகும்.

 

இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார் ரிஷப் பந்த். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் சதமடித்திருந்த பந்த், இன்றைய சதம் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு கில்கிறிஸ்ட் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

 

 

Next Story

தடைகளைத் தாண்டும் ரிஷப் பண்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

cricketer rishabh pant instagram viral video after car incident treatment 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும் சிரமத்திற்கு இடையில் படிக்கட்டின் கைப்பிடி உதவியுடன் ரிஷப் பண்ட் நடந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரண விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும் குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும் கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

”இந்த மூவரிலிருந்துதான் இந்தியாவின் அடுத்த கேப்டன்” - தேர்வுக் குழு தலைவர் அறிவிப்பு!

Published on 20/02/2022 | Edited on 21/02/2022

 

team india

 

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்தாக இலங்கையுடன் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

 

இதில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா, ரோகித் சர்மா தலைமையில் கே.எல் ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்த கேப்டனாக உருவாக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சேத்தன் சர்மா கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் கே.எல் ராகுலை கேப்டனாக்கினோம். பும்ராவை  தென்னாப்பிரிக்காவிலும், இலங்கை தொடரிலும் துணை கேப்டனாக இருந்தார். மேற்கு இந்திய தீவு போட்டிகளில் ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருந்தார். இவர்கள் மூவரும் ரோகித்தின் கீழ் கேப்டனாக உருவாக்கப்பட இருக்கிறார்கள். அடுத்த கேப்டன் யார் என்று சொல்வது கடினம்தான். ஆனால் ஒருவர் கேப்டனாக உருவவார் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.