இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 11 ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. வருகிற உலகக்கோப்பை வரை அவர் இந்திய அணியில் நீடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். ஒருவேளை காயம், ஓய்வு என ஏதாவது ஒரு காரணத்திற்காக தோனி சென்றுவிட்டால், அந்த இடத்தை நிரப்ப பிசிசிஐ ஒரு திட்டம் வைத்திருக்கலாம். ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையெல்லாம் 19 வயதே நிரம்பிய ரிஷப் பாண்ட் மீதுதான் திரும்புகிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, ஐ.பி.எல். டி20 போட்டிகள் என அதிரடியாக ஆடி ரன்குவிக்கும் ரிஷப் பாண்ட்க்கு இப்போதே ஏகப்பட்ட ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். சென்ற ஆண்டு ஐ.பி.எல். தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 43 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவரது அதிரடி ஆட்டத்தை தெண்டுல்கரே உச்சுக்கொட்டி ரசித்தார்.
இந்நிலையில், இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியா மோத இருக்கும் முத்தரப்பு டி20 போட்டியில் தோனி இடத்தில் ரிஷப் பாண்ட் களமிறங்குகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிந்திருக்கும் நிலையில், இந்திய அணி வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் நிதகாஸ் கோப்பையில் களமிறங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, எம்.எஸ்.தோனி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என அனைத்து வீரர்களுக்கும் ஓய்வளித்துள்ளது பி.சி.சி.ஐ.
சென்ற ஆண்டே இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய ரிஷப் பாண்ட், வெறும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இடம்பெற்றிருக்கும் அவர், தனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.