நேற்று நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தரவரிசை பட்டியலில் சென்னை அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 பந்துகளுக்கு 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருநாயர் 54 ரன்களும் மனோஜ் திவாரி 35 ரன்களும் எடுத்தனர். லுங்கி இங்கிடி அபாரமாக பந்துவீசி 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தீபக் சாகர் 39 ரன்கள் எடுத்தார். அதேபோல் ரெய்னா பொறுப்புடன் விளையாண்டு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ரெய்னா 61 ரன்களுடனும் டோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தனர்.
சென்னை அணி 19.1 பந்துகளுக்கு 5 விக்கெட்டுகளுடன் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை சென்னை அணி படைத்துள்ளது.
போட்டிக்குப் பின் பேசிய தோனி கூறும்போது, ‘பஞ்சாப் பந்துவீச்சாளர் அங்கித், பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். அவர் பந்து கொஞ்சம் அதிகமாகவே ஸ்விங் ஆனது. கேப்டனின் பார்வையில் அதிகமான விக்கெட் எடுக்க வேண்டும். அதனால் குழப்பத்தை ஏற்படுத்த ஹர்பஜன் சிங், தீபக் சாஹரை எனக்கு முன்பாக பேட்டிங் செய்ய களமிறக்கினேன். பந்துவீச்சாளர்கள் உடனடியாக யார்க்கராகவும் பவுன்சராகவும் வீசத் தொடங்கிவிட்டார்கள். அதோடு அவர்களுக்கு எதிராக சரியான லைனிலும் லென்த்திலும் பந்துவீசுவதை விட்டுவிட்டார்கள். இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மும்பையில் நாளை நடக்கவிருக்கும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி ஹைதராபாத்தை சந்திக்கவிருக்கிறது.