உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், கேப்டன் கூல் என பலராலும் புகழப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. களத்தில் தோல்வியைத் தழுவ வேண்டிய கட்டாயம் ஏற்படும் போதெல்லாம், புதிய ஐடியாக்களை யோசித்து அதை செயல்படுத்தியும் காட்டுவார். நெருக்கடியான சூழலில் கடைசி நம்பிக்கையாக தோனி தன் தொப்பிக்குள் இருக்கும் முயலை எடுத்து வீசவேண்டும் என்று வர்ணனையாளர்களே சொல்வார்கள்.
அப்படிப்பட்ட தோனியின் ஐடியாக்களில் மிகச்சிறந்ததாக சொல்லப்படும் ஒன்றுக்கு, அவரே சொந்தம் இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஃபார்மில் இருந்த யுவ்ராஜுக்கு பதிலாக தோனி களமிறங்குவார். அதுவரை ஃபார்முக்கு வராத தோனி களமிறங்கி அந்தத் தொடரின் சிறந்த ஆட்டத்தை விளையாடி கோப்பையையும் வென்று தருவார்.
உண்மையில் இந்த ஐடியா தோனிக்கு இயல்பாக தோன்றவில்லை. ‘வாட் தி டக்’என்ற நிகழ்ச்சியில் சச்சின் மற்றும் சேவாக் கலந்துகொண்டு பேசினர். அப்போது சேவாக், ‘2011ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் களத்தில் இருந்தனர். அப்போது சச்சின் தெண்டுல்கர் வலதுகை ஆட்டக்காரர் விராட் கோலி அவுட் ஆனால் தோனியும், இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் அவுட் ஆனால் யுவ்ராஜும் இறங்கவேண்டும் என தோனியிடம் அறிவுறுத்தினார். அந்தத் தொடரில் தோனியிடம் நேரடியாக சச்சின் கூறிய ஐடியா அதுமட்டுமே. அதனால்தான் விராட் அவுட் ஆனதும், ஃபார்மில் இருந்த யுவ்ராஜுக்கு பதிலாக தோனி களமிறங்க நேரிட்டது’ என்ற உண்மையை தெரிவித்துள்ளார்.