2018-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர் என அனைத்து தொடர்களிலும் வென்று சாதனை படைத்து இருகிறது இந்திய ஜூனியர் அணி (இந்திய ஏ அணி). மறுபுறம், இந்திய அண்டர்–19 அணி 2018-ல் உலகக்கோப்பை, 2016 மற்றும் 2018-ல் ஆசியக்கோப்பை என கோப்பைகளை வென்றுவருகிறது. இப்படி இளம் இந்திய அணி சாதனை மேல் சாதனை படைத்து, சாதிக்க வழிகாட்டிவருவது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்.
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர் - 19 பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து, இந்திய ஜூனியர் அணி பல முன்னேற்றம் கண்டுவருகிறது. அணியின் இந்த முன்னேற்றம் டிராவிடின் வழிகாட்டுதலால் சாத்தியமானதாக பலமுறை இளம் வீரர்கள் கூறியுள்ளனர். இந்த வாரம் நடந்து முடிந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் அபாரமாக விளையாடியது இந்தியா ஏ அணி. தொடரை 3-0 என வென்று, நியூசிலாந்து ஏ அணியை ஒயிட்-வாஷ் செய்தது இந்திய ஏ அணி.
டிராவிட் ஒரு பேட்ஸ்மேனாக இந்தியாவிற்கு அளித்த பங்களிப்புகள் கணக்கிட முடியாதவை. இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லாதபோது, விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாதபோது, அந்த தேவையையும் பூர்த்தி செய்தார். சிறிதும் சுயநலம் இல்லாமல், அணியின் நலனுக்காக தன்னுடைய இடங்களை விட்டுக்கொடுத்தார். அதே போன்ற சேவையை இன்று இந்திய எதிர்கால கிரிக்கெட் வீரர்களை உருவாக்க தன்னை அர்ப்பணித்துவருகிறார் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என போற்றப்படும் டிராவிட்.
டிராவிட் தன்னை ஒரு வழிகாட்டியாகவே காண்கிறார். மற்ற கோச்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். எல்லா தொடர்களிலும் அணி வெற்றி பெறுவதை தன் இலக்காக அவர் கொண்டதில்லை. ஒவ்வொரு முறையும் இளம் வீரர்கள் தன் முழுத்திறனையும், சிறந்த ஆட்டத்தையும் வெளிகாட்டுவதையே தன் லட்சியமாக கொண்டு செயல்பட்டுவருகிறார்.
2018-ல் அண்டர்-19 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது அனைவரும் இந்திய அணியை பாராட்டிவந்தனர். ஆனால், டிராவிட் தன் குறிக்கோளில் இருந்து மாறவில்லை. வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த டிராவிட், “கடின உழைப்பால் இளம் வீரர்கள் வென்றுள்ளனர். கோப்பையை வென்றாலும், இறுதிப்போட்டியில் நம்பர் 1 என்ற அளவுக்கு அணி விளையாடவில்லை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வெற்றி பெற்ற இந்த அணியிலிருந்து எத்தனை வீரர்கள், இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடுகிறார்களோ அதுதான் நமது நோக்கம்” என்று இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தினார். பிரித்திவி ஷா இந்த அணியிலிருந்து இந்திய சீனியர் அணிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தன்னுடைய ஆட்டத்தின் மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் டிராவிடின் பங்களிப்பு மிகவும் உதவியது. ஆட்டத்தில் மட்டுமல்ல, அவர் என்னை மனதார வலுவாக ஆக்கியுள்ளார்" என்று ஹர்திக் பாண்டியா ஒருமுறை கூறியிருந்தார். மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், சாஹல், ஜெயந்த் யாதவ் என இந்திய சீனியர் அணியில் இடம்பெற்ற பல வீரர்கள், டிராவிடிடம் கோச்சிங் பெற்று வந்தவர்கள்.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிக்கு விளையாடி வருகிறார் மனிஷ் பாண்டே. இவர் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் பேட்டிங் சராசரி 358. அவருடைய ஸ்கோர்கள் 5, 111*, 42, 73*, 117*, 21*, 95*,32*,93*,86*,41*. இவர் 2019-ஆம் ஆண்டு இந்திய சீனியர் அணி பங்குபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட தன்னை தயார்படுத்தி வருகிறார். அதேபோல, சுப்மான் கில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய ஜூனியர் அணியா? அல்லது ஐ.பி.எல்.அணியா? என்ற பிரச்சனையின்போது இந்திய ஜூனியர் அணிதான் முக்கியம் என்று ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்து வெளிவந்தவர் டிராவிட். பணங்களில் புரளும் ஐ.பி.எல். போட்டிகளை புறம்தள்ளிவிட்டு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதே தன் லட்சியமாக கருதி வரும் அவரது பணி மிகவும் போற்றத்தக்கது.