சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கி, இங்கிலாந்து ஏ அணியிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம்பிடித்தவர் தீபக் சகார். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் விளையாடி வருகிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜகதீஸ்புரா என்கிற பகுதியில் இவரது வீடு உள்ளது. நேற்றிரவு இந்த வீட்டிற்குள் ஆறு திருடர்கள் திருடுவதற்காக நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்ததீபக் சகாரின் தாயார் , மிகப்பெரிய அசம்பாவிதம் நேர இருப்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தார். உள்ளே நுழைவதற்கு முன்பாக சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்தெறிந்தவர்கள், சத்தமில்லாமல் வீட்டுக் கதவைத் திறந்துள்ளனர். அப்போது விழித்துக் கொண்ட சகாரின் தாயார், உடனடியாக எச்சரிக்கை மணியை அழுத்தி அக்கம்பக்கத்தினருக்கு சிக்னல் கொடுத்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட திருடர்கள் தப்பியோடினாலும், உள்ளூர் காவல்துறை அவர்களைக் கைது செய்திருக்கிறது.
திருடர்கள் முழுமையான திட்டமிடலுடன், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் சென்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜகதீஸ்புரா பகுதியில் இதுவரை நடந்த ஒன்பது கொள்ளைச் சம்பவங்களுக்கும் இந்த கும்பலே காரணம் என்கிறது காவல்துறை.