உலகப்புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள், வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடக்கவுள்ளது. இந்தநிலையில் இதில் பங்கேற்பதற்கான இந்தியாவின் தயார்நிலை குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒலிம்பிக்கிற்கு இந்தியா எவ்வாறு தயாராகியுள்ளது என பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். தொற்றுநோய்க்கு மத்தியில் தடகள வீரர்களுக்கு தடையற்ற பயிற்சியை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், ஒலிம்பிக் ஒதுக்கீட்டை வெல்ல சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது, விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்தப்படுதலின் தற்போதைய நிலை குறித்தும் மற்றும் அணியின் பணியாளர்கள் குறித்தும் அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பயணிக்கும் தகுதி பெற்ற வீரர்கள், தகுதி பெற வாய்ப்புள்ள வீரர்கள், அணியின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
நமது ஒலிம்பிக் குழுவை இந்தியர்கள் அனைவரின் சார்பாக ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஜூலை மாதம் காணொளி வாயிலாக அவர்களுடன் இணைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 11 விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 100 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்றும் மேலும் 25 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளது என்றும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 26 பாரா விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர், மேலும் 16 பாரா விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்றும் பிரதமருக்கு விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.