சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த மாதம் 28ஆம் தேதி அங்கு நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். அதே போல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை பெற்று தந்த மனு பாக்கருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (03-08-24) மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், கொரிய வீராங்கனை தங்கப் பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதில், ஹன்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜர் மற்றும் மனு பாக்கர் 28 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்தனர். இதில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆஃப் முறையில் ஹங்கேரி வீராங்கனை முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்திய வீராங்கனை மனு பாக்கர் 4வது இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இதன் மூலம், இந்த ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியாவுக்காகப் பெற்றுத் தந்த மனு பாக்கர், நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.