Skip to main content

சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டி- பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டி- பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதில் இருந்து மாறி, ஒரு திருவிழாவாகவே அதன் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு சார்ந்த வரலாறுகளும், அவை தேடித்தந்த வெற்றி தோல்விகளுமே அதற்கான காரணங்கள். அந்தவகையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சொந்தமண்ணில் கிரிக்கெட் போட்டி நடப்பதை உற்சாகமாக கொண்டாடித் தீர்த்துள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.



பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள கடாஃபி மைதானம் உலகப்புகழ்பெற்றது. இந்த மைதானத்தில் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. அதன்பிறகு பாகிஸ்தானின் எந்த மைதானத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. 

இந்நிலையில்தான் நேற்று பாகிஸ்தானின் கடாஃபி மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி ஒன்று அல்ல உலகின் ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அடங்கிய வேர்ல்டு லெவன் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய வேர்ல்டு லெவன் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

வேர்ல்டு லெவன் அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வேயின் ஆண்டி ப்ளவர் களமிறங்கியது, இரண்டாடுகளுக்கு முந்தைய நினைவுகளை வெளிப்படுத்தின. மொத்தம் மூன்று டி20 போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளிலும் வென்று சொந்தமண்ணில் விளையாடாமல் இருந்த தாகத்தை தீர்த்துக்கொள்ள அந்த அணி ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேர்ல்டு லெவன் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த பஃப் டூ ப்ளஸிஸ் களமிறங்கினர். இந்த ஆட்டத்தை கடாஃபி மைதானத்தில் இருந்து மட்டும் 25,000 ரசிகர்கள் கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்