கலாய்ப்பது என்ற பெயரில் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எல்லை மீறி செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்தியா உடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால், சமூக ஊடகங்களில் தங்கள் நாட்டு வீரர்களை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவுகள் போட்டனர். சிலர் எல்லை மீறி தனிப்பட்ட முறையில் மோசமான வார்த்தைகளைப் பதிவு செய்தனர்.
இந்த சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ரசிகர்களின் இது மாதிரியான செயல்பாடு குறித்து பேசுகையில், "ரசிகர்கள் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியது குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. மக்கள் என்னையும் மற்ற வீரர்களையும் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை தடுக்கும் சக்தி எங்களிடம் இல்லை. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் இயல்பு தான்.
நாங்கள் இதற்கு முன்னும் பல முறை தோற்றிருக்கிறோம். எங்களுடன் மோதிய அணியும் இதற்கு முன் தோல்வி அடைந்துள்ளது. ரசிகர்கள் எங்களை விமர்சனம் செய்ததை எதிர்கொண்ட போது, நாங்கள் எந்த அளவுக்கு மனது புண்பட்டிருப்போம் என்பதை யோசித்து பாருங்கள். இப்போது சமூக ஊடகங்கள் மூலமாக அனைவரும் தங்களுக்கு விருப்பப்பட்ட கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
இதுபோன்ற ரசிகர்கள் தங்களின் மனதில் தோன்றும் விஷமத்தனமான கருத்துக்களை பேசும்போது, அது வீரர்களின் மனநிலையை பாதிக்கிறது. எங்கள் விளையாட்டை விமர்சியுங்கள், ஆனால், அத்துமீறி, தனிநபர் தாக்குதலில் ஈடுபடாதீர்கள் " என வேண்டுகோள் விடுத்தார்.