சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னேவின் வாழக்கையைத் தழுவி ஷேன் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஆவணப்படத்தில் மோசமாக பந்து வீச தனக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் 276,000 டாலர்கள் தருவதாக கூறி பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவையாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். இதுதொடர்பாக வார்னே கூறியுள்ளதாவது; பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் என்னை பார்க்க வேண்டும் என்றார். எனவே நான் அவரின் அறைக்கு சென்று கதவை தட்டினேன். சலீம் மாலிக் கதவை திறந்தார். நான் அறைக்குள்ளே அமர்ந்ததும், சலீம் மாலிக், போட்டி நன்றாக செல்கிறது என்றார். நான், ஆமாம் நாளை நாங்கள் வெல்வோம் என நினைக்கிறேன் என்றேன்.
உடனே அவர் நாங்கள் தோற்க முடியாது. பாகிஸ்தானில் நாங்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்குப் புரியாது. எங்கள் வீடுகள் எரிக்கப்படும். எங்கள் குடும்பத்தினரின் வீடுகள் எரிக்கப்படும் என்றார். ஸ்டெம்ப்புகளுக்கு வெளியே வைடாக பந்து வீச எனக்கும் எனது அணி வீரர் டிம் மேவுக்கும் 276,000 டாலர் (இந்திய மதிப்பில் 1.5 கோடி) தருவதாக கூறினார். எனக்கு உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் திகைத்துப்போய் அப்படியே உட்கார்ந்திருந்தேன். பின்னர் நாங்கள் உங்களைத் தோற்கடிக்கப்போகிறோம் எனத் தெரிவித்தேன் . இந்த சம்பவம் குறித்து மார்க் டெய்லர், பயிற்சியாளர் பாப் சிம்ப்சன், போட்டி நடுவர் ஜான் ரீட் ஆகியோரிடமும் தெரிவித்தோம் எனக் கூறியுள்ளார்.
2000 ஆண்டில் சலீம் மாலிக்கிற்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.